Wednesday, February 22, 2017

உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர் வாழ்க்கையை சிறப்புள்ளதாகவும் இன்பமுள்ளதாகவும் மாற்றும் புரட்சி 1917 ஆம் வருடத்திய ரஷ்யப்புரட்சிக்குப் பின் அங்கே நடைபெற்று வந்த மாறுதல்களைக் குறித்தும், லெனின் மற்றும் இதர தலைவர்களின் உரைகளையும், மார்க்சிய நூல்கள் சிலவற்றையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்த சிங்காரவேலர் அவற்றின் தாக்கத்திற்கு ஆளானார். தொழிலாளிகளும், ஏழை. எளிய மக்களும் முதலாளிகளின் சுரண்டலிலிருந்து விடுபட்டு தலைநிமிர்ந்து உரிமையோடு வாழ வேண்டுமானால் மார்க்சீய தத்துவம்தான் வழிகாட்ட முடியுமென்ற உறுதியான முடிவுக்கு சிங்காரவேலர் வந்தார். அதை தனது சக காங்கிரஸ் ஊழியர்களிடமும் எடுத்துரைத்தார். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திரு.வி.க. எழுதியதை சுட்டிக்காட்டலாம்.‘சமயங்களின் அடிப்படையாயுள்ள பொதுமை - சமரசம் ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன்.சிற்சிலபோது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கஞ் செய்தது.அவ்விளக்கம் பொதுமையை உலகில் பரப்பி நிலை பெருக்க வல்லது காரல் மார்க்ஸ் கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது’. * * * லெனின் மறைவும் சிங்காரவேலரின் தீர்க்க தரிசனமும் மகத்தான ரஷ்யப்புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்திய தலைவரும் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டியுமான மகத்தான தலைவர் லெனின், 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று காலமானார். துளிர் விட்டு வந்த உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு லெனின் மரணமானது பேரிடியாக அமைந்தது.லெனின் மறைவானது இந்தியாவில் சிங்காரவேலரையும், அவரைப் போன்ற கம்யூனிஸ்ட்டுகளையும், தேசபக்தர்களையும் பெரிதும் பாதித்தது.லெனினுடைய மறைவுச் செய்தியை அறிந்ததும் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி, தெற்கு கடற்கரை சாலையிலிருந்த தனது தலைமை அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த கட்சிக் கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது. இரங்கல் கூட்டங்கள் நடத்தி மாபெரும் லெனினுக்கு தக்க முறையில் மரியாதை செலுத்தும்படி இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்த தனது கிளைகளுக்கு அறிவுறுத்தியது.ஜனவரி 31 ஆம்தேதிய லேபர் கிசான் கெஜட் பத்திரிகையில் லெனினுக்கு அஞ்சலி செலுத்தி சிங்காரவேலர் உருக்கமான கட்டுரையொன்றை எழுதினார்.‘மாபெரும் லெனின், மறைந்து கண்ணுக்குத் தெரியாத திருக்கூட்டத்தில் சேர்ந்துவிட்டார். பேராசிரியரும், இழந்ததை மீட்டுப் பெற வழிகாட்டுபவருமான அவருடைய மறைவினால் உலகமும், தொழிலாளர் உலகமும் இன்று பெரு நஷ்டத்தை அடைந்துள்ளது. அவர் மறைவினால் அடக்கப்பட்டுக் கிடக்கும் உலகத் தொழிலாளருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிறரது அறியாமையையும் தங்கள் பேராசையையும் குடையாகக் கொண்டு நிற்கும் தன்னலக் கும்பல்கள் இன்று இந்தப் பேரிழப்பு குறித்து மவுனம் சாதிக்கின்றன....மனித இனத்தின் துன்பத்தைத் தணிக்கத் தோன்றிய தோன்றல்களில், நிக்கோலாய் லெனின் இன்று இணையற்றவராகத் திகழ்கிறார். இனி அவர் வழியைப் பின்பற்றுவது என்பது தொழிலாளர்களுடைய பொறுப்பாகும்... உலகத் தொழிலாளர்களில் ரஷ்யத் தொழிலாளர்கள் இன்று மிக்க மகிழ்ச்சியும் நிறைவும் உடையவர்களென்று கருத முடியும். தளர்ச்சியின்றிப் பணியாற்றிய அம்மக்கள் ஊழியரே இதற்கு தலையாய காரணமாகும். அவரது மறைவுக்காகவே, அவரது தோழர்களாகிய நாம் ஆற்றாது அரற்றிக் கொண்டிருக்கிறோம்....இவ்வாறு எழுதிய சிங்காரவேலர் அந்தக் கட்டுரையின் முடிவுரையாக எதிர்காலத்தில் ரஷ்யப் புரட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாட்டையும் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த இறுதிப் பகுதி பின்வருமாறு:‘தம் சொந்த நாட்டில் நிக்கோலாய் லெனின், அரசியல், சிந்தனை, தத்துவம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய மாபெரும் புரட்சி அழிக்கப்படலாம். ஒருக்கால் மக்களில் ஒரு சிலரின் தன்னலப் போக்கினால் ஒதுக்கித் தள்ளப்படலாம். ஆனால் அது மீண்டும் உயிர்த்து எழுந்து இறுதியாக உலகம் முழுவதிலும் பரவும். கடைசியாக அது உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளரின் வாழ்க்கையை மிகச் சிறப்புள்ளதாகவும், இன்பம் உள்ளதாகவும் ஆக்கும். ஏராளமானவற்றைச் செய்துள்ள அவருக்கு, ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களைப்போலவே உழைக்கவும், வாழவும் உரிமை உண்டு என்ற தெளிவான தோற்றத்தைத் தொழிலாளிக்கு தந்த அவருக்கு நம் அன்பையும் நன்றி உணர்வுடனான வணக்கத்தையும் காட்டுகின்ற முறையில் நாங்கள் எங்கள் கரங்களை உயர்த்துகிறோம்’. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் நூலிலிருந்து... http://epaper.theekkathir.org/