Thursday, February 23, 2017

ஒரு கள்ளச் சாமியாரும் ஒரு பிசினஸ் டெவலப்பரும் ஆ.ஜீவானந்தம் தன்னை ‘யோகி’ என சொல்லிக்கொள்கிறவர், நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கள் கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அனைத்து அத்துமீறல்களிலும் ஈடுபடுகிறார். அவருடைய அராஜக செயல்களை எதிர்த்து பலரும் போராடுகிறார்கள். ஆனாலும் அந்த யோகிக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லை, 1993ல் சில ஆயிரம் சதுர மீட்டர் இருந்த ஆசிரம அளவு. இப்போது பல லட்சம் சதுரமீட்டராக விரிந்து பரவியுள்ளதே. அத்தனைக்கும் ஆசைப்படுகிற அந்த மன அமைதி வியாபாரியின் பெயர் ‘ஜக்கிவாசுதேவ்’. அவருடைய வணிக நிறுவனத்திற்கு பெயர் ஈஷா. ‘’ நாங்கள் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம்... நாங்கள் செய்த பசுமை புரட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் விருது கொடுத்துள்ளன...’’ என்று இந்த காட்டுயிர் அழிப்பான்கள் எப்போதும் கூவிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், காட்டில் இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிவிட்டார்கள்.இந்தியாவில் அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரு ஃபெவிகால் நெருக்கம் இருக்கிறது. ஈஷா மட்டும் என்ன விதிவிலக்கா என்பதை நிரூபிக்கும் விதத்தில்தான் ஆக்கிரமிப்புகளும். அராஜகங்களும் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் இப்போது மிகப்பெரும் சிலையை நிறுவி, பிரதமரைக் கொண்டு திறக்கப் போகிறது, அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலையைச் சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது ஜக்கி வாசுதேவின் ஆசிரமம். இந்த கட்டுமானங்களுக்கு மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்திடம் எவ்வித அனுமதி வாங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதியும் பெறப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதியும் இல்லை. அதுமட்டுமின்றி இப்போது ஆக்கிரமித்திருப்பது கோவையை செழிக்க வைத்த நொய்யல் ஆற்றின் முக்கிய நீர்பிடிப்புப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.அப்படிப்பட்ட ஒரு சிலையை திறக்கிற விழாவிற்குத்தான் தன்னுடைய இடைவிடாத பணிகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு தில்லியிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் பாய்ந்தடித்துக் கொண்டு ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதா... அந்த சாமியாரோடு சிரித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால் அவருடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா? காவிரி டெல்டாவில் சுமார் 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வராத ஒரு பிரதமர்... ஒருசாமியாரின் பிசினஸ் டெவலப்மெண்ட்டுக்காக வருகிறார் என்றால் அவர் யாருக்கான பிரதமர்? http://epaper.theekkathir.org/