Wednesday, February 22, 2017

சாமியார்களின் ஆ(ட்)சியா? கார்ப்பரேட் சாமியார்கள் என்றால், மோடி ஆட்சியில் அவர்களுக்கு எந்தவிதிமுறையும் கிடையாது என்பது எழுதப்படாத விதியாக மாறிநிற்கிறது. அதற்கு அத்தாட்சியாக கோவை ஈஷா மைய கட்டிடங்களும், 112 அடி ஆதியோகி சிலையும் வானுயர்ந்து நிற்கின்றன. இந்தக் கட்டுமானங்களுக்கு மலைப் பிரதேசபாதுகாப்பு குழுமத்தின் அனுமதியோ, வனத் துறையின் அனுமதியோ, சுற்றுச்சூழல் அனுமதியோ, நகர ஊரமைப்பு திட்ட அதிகாரி அனுமதியோ பெறவில்லை. மேலும் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியான இங்கு ராஜவாய்க்கால் கால்வாயும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இது குறித்து அரசு நிர்வாகமும் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்; அனுமதி பெறாத கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனநோட்டீஸ் அனுப்பியதோடு சரி, ஈஷாவின் அருகில் கூட அரசு நிர்வாகம் நெருங்கவில்லை. இதனை நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. ஆனால் ஈஷா நிர்வாகமோ ஆட்சியர் அனுமதித்திருக்கிறார் என்கின்றது.அந்த கட்டிடமே சட்டவிரோதம் என்கிற போது கட்டிடத்தின் நடுவே சிலை வைக்கமட்டும் எப்படி ஆட்சியரால் அனுமதி வழங்கமுடியும். அதுமட்டுமல்ல வனப்பகுதி அருகே112 அடியில் சிலை அமைக்க வேண்டும் என்றால்மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம்(எச்.எ.சி.ஏ), நகரஊரமைப்புத்துறை (டி.டி.சி.பி) ஆகியவற்றின் அனுமதி பெற வேண்டும், ஆனால் எந்த அனுமதியும் பெறவில்லை. ஈஷாவிற்கு விதிமுறைமீறல் என்பது புதிதல்ல. 2008ஆம் ஆண்டிலிருந்து அரசு விதிமுறைகளை மீறி சிறுவாணி நீரேற்ற மின்பாதையில் இருந்து ஈஷா மையத்திற்கு 130 கிலோவாட் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஈஷா சாமியார் ஜக்கி வாசுதேவ்-ன் தாரகமந்திரமே அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான். அது சட்ட விதிமுறைகளை மீறுவதாக இருந்தாலும் சரி, சாமானிய மக்களின் உரிமைகளை பறிப்பதாக இருந்தாலும் சரி, அடுத்தவர் குழந்தைகளை அபகரிப்பதாக இருந்தாலும் சரி, அரசு சொத்திற்கு மட்டுமல்ல அடுத்தவரின் சொத்திற்கும் ஆசைப்படுவதுதான் இவர்களின் கொள்கை லட்சியம். இவருக்குத்தான் மோடி அரசு பத்மவிபூஷன் விருது கொடுத்து ஆசி வாங்கி கொண்டது. அதே கையோடு விதிமுறை மீறல்களை விதியாக்கவும், சட்டவிரோதத்தை சட்டமாக்கவும் ஜக்கியின் 112 ஆதியோகிசிலையை திறக்க கோவை வருகிறார் மோடி. இவர்களோடு மட்டுமல்ல ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட்சாமியார்களின் அனைத்து மோசடித்தனங்களுக்கும் ஆர்எஸ்எஸ் வழி நின்று மோடி அரசு ஆசி வழங்கி வருகிறது. இதைவிட இந்திய அரசின் பிரதமர் பதவிக்கு ஒரு அவமானத்தை எவராலும் தேடித்தர முடியாது.தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவேரி ஆணையம் அமைக்கும் பிரச்சனைக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. பற்றியெரியும் செல்லாநோட்டு பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் நின்று பேசக்கூட நேரமில்லை. ஆனால், சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு அரசின் தலைமையே உடந்தையாக இருப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கே அவமானம். http://epaper.theekkathir.org/