Wednesday, February 22, 2017

சட்டத்தை மீற வேண்டாம் பிரதமர் அவர்களே... -பெ. சண்முகம் கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் ஈஷா பவுண்டேசன், 112 அடி உயரமான ஆதிசிவன் சிலையை நிறுவியுள்ளது. இந்த சிலையை வரும் பிப்ரவரி-24ந் தேதி தாங்கள் நேரில் வந்து திறந்து வைக்க இருப்பதாக ஈஷா இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தமிழக அரசு அதிகாரிகளும் தங்களின் வருகையை உறுதிப்படுத்தும் விதத்திலேயே பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஈஷா நிறுவனம், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்வதற்கு இடையூறாக ஒரு லட்சம் சதுர அடிக்கு மேலாக பிரம்மாண்டமான கட்டுமானத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும் வகையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருவதுடன், இத்தகைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள இடம் நன்கு விளையக் கூடிய நன்செய் நிலங்கள் ஆகும். மேற்படி கட்டுமானப் பணிகளுக்கு எந்தவொரு துறையிடமும் ஈஷா நிறுவனம் அனுமதி பெறவில்லை. பல்லுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் பணிகளை மேற்கொண்டதால், இதை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவர் நீதிப் பேராணை மனு எண் று.ஞ.சூடி.3550 டிக 2017 தாக்கல் செய்தார். இந்த ரிட்மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு பிப்ரவரி 17ஆம் தேதி ஈஷா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இத்தகைய நிலையில், தாங்கள் வருகை தந்து சிலையை திறந்து வைப்பது அரசின் அனுமதியின்றி, சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சிலையை நாட்டின் பிரதமரே திறந்து வைத்தார் என்ற அவப்பெயர் தங்களுக்கு ஏற்படும் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.மேலும், ஈஷா நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அரசு மற்றும் நீதித்துறையில் ஈஷா நிறுவனம் இத்தகைய செல்வாக்கைப் பயன்படுத்தும் நிலை உருவாகும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே, தாங்கள் பிப்ரவரி 24ந் தேதி கோவை ஈஷா பவுண்டேசனில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். - (பிரதமர் நரேந்திரமோடிக்கு பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத் தலைவர் பெ.சண்முகம் அனுப்பியுள்ள கடிதம்) http://epaper.theekkathir.org/