இனிவரும் நற்காலத்தின் முன் அடையாளம்... - என்.ராமகிருஷ்ணன் ***********************பொது உடமை லட்சியம் தனது நாட்டில் வெற்றிபெறுமானால் அது எத்தகைய அற்புதமாயிருக்கும் என்று தனது மனக்கண்முன் ஒரு காட்சியை நிறுத்துகிறார் பாரதி. 15 கோடி மக்களைக் கொண்ட ரஷ்யாவின் பொது உடமை அன்று 30 கோடி மக்களைக் கொண்டிருந்த பாரதத்தில் தோன்றினால் ஏற்படும் புதுமையை விவரிக்க அவரது கரம் பேனாவை நாடுகிறது.‘பாரத ஸமுதாயம் வாழ்கவே- வாழ்க, வாழ்கபாரத ஸமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜயபாரத ஸமுதாயம் வாழ்கவேமுப்பது கோடி ஜனங்களின் ஸங்க முழுமைக்கும் பொது உடைமைஒப்பி லாத ஸமுதாயம் உலகத்துக் கொரு புதுமை- வாழ்க!பாரத ஸமுதாயம் வாழ்கவே! ஜய ஜயமனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினி யுண்டோ?மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை யினி யுண்டோ? ---------------------இனியொரு விதி செய்வோம்- அதைஎந்த நாளுங் காப்போம்தனியொருவனுக் குணவில்லை யெனில் ஜகத்தினை யழித் திடுவோம்----------------------எல்லாரு மோர் நிறை எல்லாருமோர் விலைஎல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம்எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆம்எல்லாரும் இந்நாட்டு மன்னர்பாரத ஸமுதாயம் வாழ்கவே! ஜய ஜய ஜய’’‘பாரத சமுதாயம் அவருடைய கடைசிப் பாடல்களில் ஒன்றாகும். ‘‘இதை கவியரசரது அரசியல் சாசனமெனக் குறிப்பிட வேண்டும்’’என்கிறார் சோவியத் அறிஞர் கி.பி.செலிஷேவ்‘தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் இந்தப் பூமி சொந்தமானது. மனித சமூகத்தில் இவர்களே தேனீக்கள். மற்ற நம் போன்றோரெல்லோரும் பிறர் சேகரித்து வைத்த தேனை உண்டு திரியும் வண்டுகள்’ என்று தெளிவுபடக் கூறிய பாரதி தன் காலத்திலேயே ஒரு முக்கிய நிகழ்ச்சிப் போக்கை தமிழகத்தில் கண்டார். தொழிலாளிகளும் ஆட்சி அதிகாரத்தை ஏற்று நடத்தும் திறன் படைத்தவர்கள், அதற்கான வல்லமை பெற்றவர்கள் என்று ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து ஆதர்சம் பெற்ற திருவிக, சக்கரைச் செட்டியார் போன்றோரினால் வழிகாட்டப்பட்ட பி. அண்ட் சி மில் தொழிலாளிகள் தங்கள் உரிமையைக் காப்பதற்கென தனிச்சங்கம் அமைத்ததையும் அதைத் தொடர்ந்து சென்னா மாநகரில் வேறு பல தொழிற்சங்கங்கள் உருவாக ஆரம்பித்ததையும் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அந்தத் தொழிலாளிகளை சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பதற்கு, தான் இயற்றிய தேசப் பக்தப் பாடல்கள் பாடப்படுவதையும் பாரதி தன் வாழ்நாளிலேயே கண்டார். அது மட்டுமல்ல, ‘சென்னையில் அவர் காலத்தில் துவங்க இருந்த தையற் தொழிலாளர் சங்கத்தை வரவேற்றார்’’.பொது உடமைக் கட்சி ஏன் இந்தியாவில் தோன்றி வளர்ச்சியடையவில்லை என்று கவலைப்பட்ட பாரதியின் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான முதல் நடவடிக்கை பாரதி வாழ்ந்த காலத்திலேயே துவங்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக அந்த ஆங்கிலேயர்களின் எதிரி நாடுகளான ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஆப்கானிஸ்தானத்திலும் இருந்துகொண்டு செயல்பட்ட இந்திய தீவிரவாதிகளிடையேயிருந்து மார்க்சீய கருத்துக்கு ஈர்க்கப்பட்ட எம்.என்.ராய். அபனி முகர்ஜி, முகமது அலி, முகமது சாபிக், எம்.பி. திருமலாச்சார்யா போன்றோரைக் கொண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்டது. இந்தத் தகவல் பல வருட காலம் ரகசியமாகக் வைக்கப்பட்டிருந்ததால் இந்த முன் முயற்சியை பாரதி அறியவில்லை. ஒரு விஷயத்தை பாரதி அறிந்திருந்தால் மிக மிக மகிழ்ச்சியடைந்திருப்பார் என்பது நிச்சயம்.1906ஆம் ஆண்டில் சென்னையில், தான் ஆசிரியராக இருந்து நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையை வெளியிடுபவராக பொறுப்பேற்றிருந்தவரும் அந்த அச்சகத்தின் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டிருந்தவருமான மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சார்யா என்ற எம்.பி.டி. ஆச்சார்யா, இந்த முதல் கம்யூனிஸ்ட் குழுவில் ஒரு உறுப்பினர் என்பதையும், 1919ஆம் ஆண்டில் அவர் லெனினைச் சந்தித்து உரையாடியதையும் பாரதி அறிந்திருந்தால் அளவற்ற பூரிப்பு அடைந்திருப்பார்.ஆங்கிலேய அரசாங்கம் தனது கோபக் கணையை ‘இந்தியா’ பத்திரிகை மீது திருப்பியபொழுது, தான் கைதாகாமல் தவிர்க்கும் பொருட்டு பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான புதுச்சேரியில் பாரதி தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து கொண்டு பாரதி, பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தும் பொருட்டு சென்னையிலிருந்த அச்சகத்தை அங்கே கொண்டு சென்றவரும் இதே ஆச்சார்யாதான்! பாரதியின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் இந்த எம்.பி.டி. ஆச்சார்யா.தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைப்பு உருவாகி 11 மாத காலத்திலேயே பாரதி காலமானார். 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று நள்ளிரவில் உயிர் நீத்தார். அச்சமயத்தில் பாரதியாரின் குடும்பத்தினருடன், அவரது நெருங்கிய நண்பரும், மார்க்சிய சிந்தனையாளருமான ம.சிங்காரவேலர் அருகிலிருந்தார் என்று சில தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யப் புரட்சியானது மாபெரும் மாறுதலை உருவாக்கப் போகிற மகத்தான சக்தி என்று பாரதி தன் வாழ்வின் இறுதிவரை உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மறைவதற்கு சில மாதங்கள் முன்பு, 1921 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் தான் எழுதிய கட்டுரையில் தனது ஆழ்ந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.‘‘இந்தப் பூமியில், நாமே நெடுநாள் இருந்து பலவித நியாயங்கள்நடந்து நிறைவேறுவதைப் பார்க்கப்போகிறோம். ‘‘பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது.‘‘மனித ஜாதி முழுமைக்கும் விடுதலை உண்டாகப் போகிறது.‘‘ருஷ்ய ராஜ்யப் புரட்சியானது இனிவரப்போகிற நற்காலத்தின்முன்னடையாளங்களில் ஒன்று.‘‘பூமி தூளாகாது.‘‘மனிதர் ஒருவருக்கொருவர் செய்யும் அநீதி தூளாகும்’’.தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலின் ‘‘மகாகவியின் ஆனந்தமும் ஆதங்கமும்’’ எனும் பகுதியிலிருந்து... http://epaper.theekkathir.org/