Friday, February 24, 2017

மதவெறி நஞ்சைக் கக்கும் பாஜகவின் பிரச்சாரம் *******************உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டத்தொடங்கிவிட்டது. நரேந்திரமோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் தலைமையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறி நஞ்சைக் கக்கும் பிரச்சாரம் முழு வீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு, பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கிறது.தேர்தல் பிரச்சாரத்தினூடே நரேந்திர மோடியே இதனை மிகவும் மூர்க்கமான முறையில் தொடக்கி வைத்துள்ளார். பதேபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் என்ன பேசினார் தெரியுமா? ஒரு கிராமத்தில் இடுகாடு இருக்கிறது என்றால், அங்கே சுடுகாடும்இருக்க வேண்டுமாம். ரம்ஜான் அன்று மின்சாரம் இருக்கிறது என்றால், தீபாவளிஅன்றும் இருக்க வேண்டுமாம். முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகமாக ஆனால் மிகவும் மூர்க்கத்தனமாக மதவெறியைக் கிளப்பிவிடும் மோடி, தன் உரையை முடிக்கும் தருவாயில், விரைவில் ஹோலி வருவதையொட்டி, ஈத் பண்டிகையின்போது இருப்பதைப்போல ஹோலி சமயத்திலும் மின்சாரம் இருக்க வேண்டும் என்று மிரட்டும்தொனியில் கூறி தன் உரையை முடித்திருக்கிறார்.மோடிக்கு உறுத்தலில்லைஇவற்றின் பொருள் என்ன? உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதி அரசாங்கம், ‘முஸ்லிம்களை முகத்துதி’ செய்து இந்துக்களை பலிகடாவாக்குகிறது என்கிற கற்பனையே தவிர வேறொன்றும் அல்ல. உத்தரப்பிரதேச சமாஜ்வாதி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அதீத சலுகைகளைக் காட்டிவருகிறது என்று மிகவும் பொய்யானமுறையில் சித்தரித்திட மோடிக்கு எவ்விதமான மன உறுத்தலும் கிடையாது. உண்மையில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுவதென்ன? உத்தரப்பிரதேசத்தில் ஈத் திருநாள் அன்று இருந்ததைவிட தீபாவளி சமயத்தில்தான் மின் விநியோகம் அதிக அளவில் இருந்திருக்கிறது. அதேபோன்று, முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும்தான் லேப்டாப் பிரதானமாக விநியோகிக்கப்படுகிறது என்கிற பாஜகவினரின் பிரச்சாரமும் உண்மையல்ல.முஸ்லிம்களுக்கு எதிராக இத்தகைய மதவெறிப் பிரச்சாரம் பாஜகவின் உயர்மட்டத் தலைமையால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது பாஜகவின் தலைவரான அமித்ஷாவின் பேச்சுக்களிலிருந்து மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருமானால், மாநிலத்தில் உள்ள அனைத்து ‘மாட்டிறைச்சிக் கடைகளும்’ மூடப்படும் என்றும்,‘அதன்மூலம் மாநிலத்தில் பசுக்கள், எருமைகள் மற்றும் காளைகளின் ரத்தம் ஓடுவது தடுக்கப்படும்’ என்றும் அறிவித்திருக்கிறார். மேலும் அவர்முஸ்லிம்களை கிரிமினல்கள் என்று அடையாளப்படுத்துவதோடு, சமாஜ்வாதிக் கட்சியும், பிஎஸ்பி கட்சியும் அவர்களை ஊட்டி வளர்த்துவருவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.மற்றுமொரு கற்பனைபாஜக தேர்தல் அறிக்கை ‘ரோமியோ எதிர்ப்புக்குழுக்கள்’ அமைப்பது குறித்து கூறுகிறது. முஸ்லிம் இளைஞர்களுக்கு இவர்கள்வைத்திருக்கும் குறியீட்டுப் பெயர் ‘ரோமியோக்கள்’ என்பதாகும். இந்து சிறுமிகளை இந்த ‘ரோமியோக்கள்’ பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்துவதாகவும் இவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதன்மூலம் இவர்களின் முந்தைய ‘ஜிகாத் காதல்’(டடிஎந தihயன)பிரச்சாரம், மீளவும் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறது. மேலும் இவர்கள் கைரானா போன்ற நகரங்களிலிருந்து இந்துக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுத்திடவும் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் பேசிவருகிறார்கள். இது மற்றுமொரு கற்பனையே என்று புலனாய்வு மேற்கொண்ட ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு கரைந்திருப்பதால், தாங்கள் மீண்டும் செல்வாக்கு பெறுவதற்காக இவ்வாறு மதவெறிப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக சில அரசியல்விமர்சகர்கள் ஆய்வுமுடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது ஒரு தவறான ஆய்வாகும். பாஜகவைப் பொறுத்தவரை, மதவெறி மேடை என்பதுஅவர்களுடைய அரசியல் பிரச்சாரத்தின் பிரிக்கப்பட முடியாத ஒரு முக்கியமான பகுதியாகும். அது அவர்களின் இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து கிளைத்ததாகும். நரேந்திர மோடியும், பாஜகவும் அத்தகைய மதவெறிப் பிரச்சாரத்தை சென்ற ஆண்டு பீகார் தேர்தலின்போது கட்டவிழ்த்துவிட்டார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதும் கட்டவிழ்த்துவிட்டார்கள். தேர்தல் சமயங்களில் ஆர்எஸ்எஸ்.பாஜக ஊழியர்களின் மூலமாக அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரையிலும் எப்போதுமே நடத்தப்படுவதாகும். இவ்வாறான மதவெறிப் பிரச்சாரங்கள் தலைவர்களால் உயர்த்திப்பிடிக்கப்படுகிறதா என்பது ஆங்காங்குள்ள ஸ்தல நிலைமைகளில் உள்ள மதிப்பீடுகளைச் சார்ந்ததாகும். மதவெறி அரசியல் திட்டம்பாஜகவைப் பொறுத்தவரை, மதவெறிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றுவது என்பதும்,இந்து - முஸ்லிம் வேற்றுமையை உருவாக்குவது என்பதும், அவர்களுடைய அரசியல்திட்டம் மற்றும் இந்துக்களை ஒருமுகப்படுத்துவதற்கான அவர்களின் தணியாத தாகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இதற்கு அவர்கள்உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாதிய அமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் இத்தகைய மதவெறிப் பேச்சுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் சுயமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பதிலிருந்து, எந்த அளவிற்கு மதவெறிப் பேச்சுக்கள் பிரதான அரசியலில் ஏற்கத்தக்க ஒன்றாக மாறி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.உத்தரப்பிரதேச வாக்காளர்கள், தங்களைப் பிரித்து அதன்மூலம் மிகவும் இழிவான முறையில் ஆட்சியில் அமரலாம் என்கிற பாஜகவின் மதவெறி சூழ்ச்சித்திட்டங்களை நிராகரிப்பார்கள் என்று நம்புவோம்.(பிப்ரவரி 22, 2017)தமிழில்: ச.வீரமணி http://epaper.theekkathir.org/