Wednesday, February 22, 2017

ஆதி சிவனுக்கு அனுமதி கொடுத்தது யார்? - சி.முருகேசன் ‘எங்க கிட்ட கேட்டிருந்தா உங்களுக்கு நாங்க நிலம் குடுத்திருப்போம்’’ என்று பேரம் பேசிய ஈஷா யோகா மையத்தினரிடம் அடிபணியாமல் ஒரு குடிசை கூட இல்லாத பழங்குடி மக்கள் எதிர்த்து நிற்கிறார்கள். அதே நேரத்தில் வனவளம், நீர், நிலம் என இயற்கையைச் சூறையாடிய ஈஷா யோகா மையத்தில் பிரதமரின் வருகைக்காக அனைத்து அரசுத்துறைகளும் அணிவகுத்து பணிந்து குனிந்து நிற்கின்றன. கோவையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சிறுவாணி சாலையில் உள்ள 17 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பரப் பலகைகள் பொக்லைன் மூலம் முன்னறிவிப்பின்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. சாலையோரம் இருந்த இளநீர் கடைகள் உட்பட அப்புறப்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான காவல்துறை மற்றும் அரசு வாகனங்கள் அந்த சாலையில் விரைந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பறந்து வந்து பிப்ரவரி 24 வெள்ளியன்று கலந்து கொள்ளவிருக்கும் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளில் சிறுதுளி. ஈஷா யோகா மையத்தில் ஆன்மீகம் என்கிற போர்வையில் நடந்து வரும் அத்துமீறல்களுக்கு பிரதமரின் வருகை மேலும் கூடுதல் அங்கீகாரம் அளிப்பதாகவே கருதப்படுகிறது. ‘‘யான வழித்தடத்த அடச்சிட்டாங்க’’ ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள்- அவர்களது மூதாதையர் காலம் தொட்டு பயன்படுத்தி வந்த நீராதாரங்கள், வனவளம் அனைத்தும் பறிபோனதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஈஷாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உதவியுடன் வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான மடக்காடைச் சேர்ந்த முத்தம்மாவை (46) ஈஷாவின் ஆட்கள் அணுகி, வழக்கு எதுக்கு ஜக்கி வாசுதேவுடன் பேசியிருந்தாலே உங்களுக்கு இடம் கொடுத்திருப்போமே எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து முத்தம்மா கூறுகையில், ‘நாங்க எதுக்கு சார் அவர்கிட்ட போய் நெலம் கேக்கணும், எங்களுக்கு நெலம் தரவேண்டியது அரசாங்கம். இவர் யாரு நடுவில. வீட்டுக்கு நிலம் மட்டுமா பிரச்சனை; தண்ணி வராம தடுத்திருக்காங்க, யான வழித்தடத்த அடைச்சிட்டாங்க, எங்க காட்டோட அமைதியை கெடுத்திட்டாங்க. இதுக்கெல்லாம் சேர்த்து தான் கேசு போட்டிருக்கிறோம்" என்றார். ஈஷா மையத்தின் எதிரில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட மடத்துவயல் குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்துக்கு நீராதாரமாக விளங்கும் நீலிவாய்க்கால், ஏழுவாய்க்கால் ஆகியவை ஈஷா மையத்தால் தடுக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு தொண்டாமுத்தூர் வரை நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றுக்கான நீர் வரத்தும் தடைப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவிய போதிலும் நீலிவாய்க்காலில் சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீருக்காக தினமும் யானைகள் வருவதாக பழங்குடியின பெண் ரங்கநாயகி தெரிவித்தார். இவரது குடிசைக்குப் பின்புறம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள 30 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகளுக்கு பட்டா இல்லை. மடக்காட்டில் 65 பழங்குடியினருக்கு 1.38 ஏக்கர் நிலத்தில் வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைகளைத் தவிர வேறு நிலம் இல்லை. இது போல் முள்ளங்காட்டில் உள்ள 350 தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் 5 குடும்பங்கள் வரை வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெள்ளி கற்பகம்மாள் தம்பதியினர் திருமணமான தங்களது 4 பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர். அனைத்தும் பினாமி பெயர்களில்.... இதே பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் அல்லாத படித்த இளைஞர் கோவை காந்திபுரத்தில் சுயதொழில் செய்து வருகிறார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறுகையில், ஈஷாவிடம் உள்ள நிலங்களில் பெரும்பகுதி நிலச்சீர்திருத்தத்தின் கீழ் கைப்பற்றப்பட்டவை. இந்த நிலங்களுக்கு மூல ஆவணம் இருக்காது. அனைத்தும் பினாமி பெயர்களில் உள்ளன. எங்கள் தாத்தா பெயரில் கூட நிலம் உள்ளது. அதில் ஒரு பகுதியை கூட ஈஷா வாங்கியிருக்கிறது என்றார். மடக்காடு பழனிசாமி (57) கூறுகையில், ‘‘2000 க்கு பிறகு தான் அதிக அளவில் நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். ஏக்கர் ரூ.60 ஆயிரத்துக்கு ஆரம்பத்தில் கொடுத்தார்கள். பிறகு ஏக்கருக்கு ரூ.65 லட்சம் வரை கொடுத்தார்கள். இப்போது ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார். வனத்துறைக்கு சம்பந்தமில்லையா? வனப்பகுதியின் அமைதியைக் குலைக்கும் வகையில் ஒளிவெள்ளத்துடன் ஓசையெழுப்பும் நிகழ்ச்சியை நடத்த அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது பலரது கேள்வியாக உள்ளது. இது குறித்து வழக்கறிஞர் ஆர்.கலையரசு அனுப்பிய மனுவுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.சண்முகம் தனது துறைக்கு சம்பந்தமில்லை என பதிலளித்துள்ளார். மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியத்திடம் கேட்ட போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலையோ கட்டுமானங்களோ இல்லை. யானை வழித்தடம் குறித்து ஆய்வு செய்து தான் கூற முடியும் என்றார். ஆனால் ஈஷா யோகா செல்லும் வாகனங்கள் அனைத்தும் அருகில் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகர் அலுவலகத்தையும், மறுபுறம் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இருட்டுப்பள்ளம் சோதனைச் சாவடியையும் கடந்து செல்ல வேண்டும். இங்குள்ள அறிவிப்பு பலகையில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஈஷாவுக்கு அது பொருந்தாது என்பது போல் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். நகர் ஊரமைப்புத் துறை அலுவலர் செல்வராஜிடம் இது குறித்து கேட்டபோது, சிலை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளார். அதனுடன் 2 மண்டபம் கட்ட அனுமதி கோரியுள்ளனர். முறையான ஆவணங்கள் வழங்கப்படாததால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கும் உள்ளது. இந்த பகுதியில் நடக்கும் எந்த ஒரு கட்டுமானத்திற்கும் மலையிட பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி தேவை. அப்படி எந்த அனுமதியும் இது வரை ஈஷா மையம் பெற்றதாக தகவல் இல்லை எனக் குறிப்பிட்டார்.உயர்நீதிமன்றத்தில் முத்தம்மா தாக்கல் செய்துள்ள மனுவில், 2005 முதல் 2015 வரை பத்து ஆண்டுகளில் மனிதர்கள் - வனவிலங்கு இடையேயான மோதலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வனத்துறையின் ஒரு அறிக்கையை குறிப்பிட்டுள்ளார். அதில் 2005ல் உயிரிழப்பு-4, காயம்-2, இழப்பீடு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் எனவும், இது 2015ல் உயிரிழப்பு-18, காயம்-19 இழப்பீடு ரூ.25 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குக்கு இடைக்கால தடைபெற்று நடத்தப்படும் விழாவில் தான் பிரதமர் பங்கேற்க உள்ளார். இது போல் பசுமைத் தீர்ப்பாயத்தில் அவர் தொடுத்துள்ள வழக்கில், விளக்கம் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. http://epaper.theekkathir.org/

ஈஷாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தின் ஒருபகுதி.