தேவை தனிக்கவனம் பழங்குடிகளின் கல்வி உரிமை காக்கப்படுமா? என்ற ஜோ. ராஜ்மோகனின் கட்டுரையை (பிப். 20) தீக்கதிரில் படித்தேன். உண்டு - உறைவிட பள்ளிகளின் அவலநிலை, ஆசிரியர்கள் வாராமை, மாணவர்களின் கல்வி தரம் குறைந்திருப்பது, கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது போன்ற அனைத்தும் சரியே! ஆனால், இத்தகைய மோசமான நிலைமைக்கு காரணம், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை “கல்வித்துறையின் கீழ் கொண்டு வராததுதான்” என்று கட்டுரையாளர் கூறியிருக்கிறார். பழங்குடியினருக்கென்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வரும் காலம் இது. பழங்குடியின மக்கள் மீது சிறப்பு கவனம், சிறப்பு நிதி ஒதுக்கீடு, சிறப்புத் திட்டம் போன்றவை மேலும் பல்லாண்டு காலத்திற்கு தொடர வேண்டியுள்ளது. அந்த வகையில், உண்டு - உறைவிடப்பள்ளிகள் அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் கொண்டதாக மேம்படுத்தப்படுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவது, கண்காணிப்பது, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த சிறப்புக் கவனம் போன்றவற்றில் ஆதி-திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். பொது கல்வித்துறையின் கீழ் இப்பள்ளிகளை மாற்றுவது மேலும் புறக்கணிக்கப்படுவதற்கும், உண்டு - உறைவிட பள்ளிகளுக்கென்று இருக்கும் நிதி ஒதுக்கீடுகள் இல்லாமல் போவதற்குமான நிலைமைதான் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். - பெ. சண்முகம், துணைத் தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் Courtesy: http://epaper.theekkathir.org/