மக்கள் மன்றம்***************** ஜக்கியிடம் சிக்கிய சிவன் ********************* “படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்/ நடமாடும் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா/ நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்/ படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.” - இது திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல். கோயிலில் உயிரற்ற படமாக- சிலையாக இருக்கும் கடவுள்களுக்கு படையலிடுவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. நடமாடும்உயிருள்ள கோயில்களாக இருக்கும் மனிதர்களுக்கு படையலிட்டு, அவர்களின் பசியை ஆற்றினால், அது இறைவனையும் சென்றடையும் என்பதுதான் இதன் பொருள். இதேவகைப்பட்டதுதான், “ உள்ளம் பெருங்கோயில்ஊனுடம்பு ஆலயம்/ வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்/ தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்/ கள்ளப் புலன் ஐந்தும் காளாமணிவிளக்கே...” என்ற பாடலும். ரத்தமும் சதையுமான மனிதர்களின் உடம்புதான் இறைவனின் கோபுரம் போன்ற ஆலயம்.அந்த உடம்பிற்குள் இருக்கும் உள்ளம்தான் இறைவன் வாசம் செய்யும் கருவறை. வாய்தான் கோபுரத்திற்குள் செல்லும் வாசல்.மொத்தமாக சொன்னால் உயிர்தான் சிவன். எனவே, ஒருவன் தனது ஐம்புலன்களையும் பேணிக் காப்பதன் மூலம், உயிராகிய சிவனையும் பாதுகாப்பவனாக- வணங்குபவனாக ஆகிறான் என்று திருமூலர் சொல்கிறார்.ஆனால், அந்தச் சிவனின் பெயரால், மதயானை போல வனத்தையே ஒருவர் சூறையாடிக் கொண்டிருக்கிறார்; ஒரு நாட்டின் பிரதமரே அதற்கு உடந்தையாக இருக்கிறார்; கேட்டால் இதுதான் பக்தி; இதுதான் ஆன்மிகம் என்கிறார்கள். தென்னாடுடைய சிவன், இப்போது ஜக்கி போன்றவர்களிடம் சிக்கி நிற்கிறான். இவர்களிடமிருந்து சிவனையும் சீவனை(உயிர்களை)யும் மீட்பதல்லால் வேறுபணி சிவ தொண்டர்களுக்கு இருக்க முடியாது. - மு. உமாபதி, மயிலாப்பூர் இவர்களும் உடந்தை ரேசன் கடைகளில் உளுந்து, பருப்பு, பாமாயில் நிறுத்தம் என்ற செய்தியைத் தீக்கதிரில் படித்தேன். மோடி அரசு கொண்டுவந்த உணவுப் பாதுகாப்பு(!) சட்டத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் இருந்த அதிமுக அரசு என்றைக்கு கையெழுத்துப் போட்டதோ, அப்போதே எதிர்பார்த்த விஷயம்தான் இது. தற்போது, சிறப்பு விநியோகத் திட்டப் பொருட்கள் மட்டுமன்றி, அரிசி, சர்க்கரைக்கும் ஆபத்து வந்து விட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை வாய் திறக்கவில்லை. ரேசன் முறைகேடு தொடர்பாக எஸ்எம்எஸ்-ஸில் புகார் தெரிவிக்கலாம் என்றுஅதிகாரிகளை விட்டு அறிவிக்கச் செய்கிறார்கள். ரேசன் பொருட்களை திடீரென சொல்லாமல் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் நிறுத்தி விட்டது முறைகேடு வகைக்குள் வராதா? என்று தெரியவில்லை. ஒருவேளை உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டதுதான்இதற்குக் காரணம் என்றால், அதை வெளிப்படையாக சொல்லி, அதையாவது தமிழக அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்குகண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.அதிமுக-வை உடைக்க பாஜக சதி செய்வதாக அதிமுக-வின் கீழ்மட்டத் தலைவர்கள் பேசினார்களே தவிர, சசிகலா உள்ளிட்டோர் வாய்திறக்கவில்லை. இப்போது ரேசன் விஷயத்திலும் அதேபோல அதிமுக அரசு நடந்து கொள்ளுமானால், மத்திய அரசின் மோசடிக்கு அதிமுக அரசு உடந்தையாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். - ஆண்டார். ஸ்ரீனிவாசன், சென்னிமலை நான் கண்ட சோவியத் தீக்கதிரில் வரும் யுகப்புரட்சி நினைவுகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. சோவியத் ஒன்றியம் பிளவுபடுமுன் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய சோவியத் பாதுகாப்பு உடன்படிக்கையின் 20-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் இந்தியா சார்பாக பங்குகொண்டு உரையாற்றினேன். அந்நிகழ்விற்கு முன் சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.நள்ளிரவில் பணி முடிந்து ஆடிப்பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பும் மகளிர்கூட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காந்தியடிகள் சுதந்திரத்திற்கான அளவுகோலாக இதனைத்தானே வைத்திருந்தார். ஒரு நெசவாலைக்குச் சென்றேன். பஞ்சாலையும் நெசவாலையும் இணைந்த அந்த ஆலையின் தலைமை நிர்வாகி ஒரு பெண்ணாகஇருப்பதைக் கண்டு வியந்தேன்.அவர் கடந்து வந்த பாதை மேலும் அதிக வியப்பிற்கு உள்ளாக்கிற்று. சாதாரண தொழி லாளியாகப் பணியைத் தொடங்கிய அவர்,மாலை வகுப்புகள் மூலம் அத்துறையிலேயே பட்டயம், இளம்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள், இறுதியாக முனைவர் பட்டமும் பெற்றவர். நம் நாட்டில் தொழிலாளர் சாகும்வரை தொழிலாளிதான். மிகப் பிரம்மாண்டமான அவ்வாலையைத் திறம்படஅவர் நிர்வகிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவரது தலைமையை ஏற்று மற்றவர் பணி புரிந்தனர். நிர்வாகி-தொழிலாளர் இடையே இருந்த சகோதர உறவு நமது ஆலைகளில் காண இயலாது. பெண் என்பது ஒரு தடையாக இல்லை.துருக்குமேனிஸ்தானில் தம் பாரம்பரிய விளையாட்டுகள், இசைக் கருவிகள் பற்றிய ஆய்வுகள் நடைபெறும் நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். சில நூற்றாண்டுகட்கு முன் இருந்த இசைக் கருவியைக் கண்டறிந்து அதனை மீட்டுப் பயன்படுத்தும் முயற்சியைக் கண்டேன். அதே போல நாட்டுப் பாடல்கள், நடனம் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும் முற்பட்டதைக் கண்டு மகிழ்ந்தேன். பள்ளிக் குழந்தைகள் மீட்கப்பட்ட நடனத்தை ஆடிக் காண்பித்தனர். நம் நாட்டைப் போல் பல மொழிகள் பேசும் நாடாக இருந்த போதிலும் சோவியத் ஒன்றியத்தில் வட்டார மொழிகள் ருசிய மொழிக்கிணையாக வளர்க்கப்பட்டன. அங்கு வட்டார மொழியிலேயே முனைவர் பட்டம் வரை கற்க முடியும். - ச.சீ. இராஜகோபாலன், சென்னை Courtesy: http://epaper.theekkathir.org/