Tuesday, February 28, 2017

இதுதான் உணவு பாதுகாப்பா? ************************** 2007-ஆம் ஆண்டு, வெளிச்சந்தையில் உணவுதானியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து, ஏழை- நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ‘சிறப்பு விநியோகத் திட்டம்’ ஒன்றை அப்போது ஆட்சியிலிருந்த திமுகஅரசு கொண்டுவந்தது. கிலோ அரிசி 2 ரூபாய்க்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தநிலையில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை கிலோ ரூ. 30 விலையிலும், பாமாயிலை கிலோ ரூ. 25 விலையிலும் ரேசன் மூலம் அரசு விநியோகித்தது. இத்திட்டம் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், மக்களிடமிருந்த வரவேற்பு - எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, அடுத்து வந்த அதிமுக அரசும் இதனைத் தொடர்ந்தது. தமிழகத்தில் 1 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரம் குடும்ப அட்டைகள் இருந்தநிலையில், பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்தனர். இந்நிலையில்தான் ஒரு கட்டத்தில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. அடுத்ததாக, ஒருமாதம் பாமாயில் வாங்கினால், அடுத்த மாதம் அது கிடைக்காது என்றாக்கப்பட்டது. துவரம் பருப்புகூட முந்திச் சென்றால்தான் உண்டு என்றானது. கடைசியில் இப்பொருட்களின் விநியோகம் கடந்த ஜனவரி மாதம் முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு நடப்பாண்டில் பொது விநியோகத் திட்டத்திற்கென்று ரூ. 5101 கோடியை ஒதுக்கீடு செய்தது. இது சிறப்பு விநியோகத் திட்டத்திற்கும் சேர்த்துத்தான். ஆனால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சிறப்பு விநியோகத் திட்டம்நிறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக, முதலுக்கே மோசம் வந்த கதையாக, ரேசனில், 20 கிலோவுக்குப் பதில் இனி 10 கிலோ அரிசிதான் வழங்கப்படும்; எஞ்சிய 10 கிலோ அரிசிக்குப் பதில் 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், அதிமுக அரசு கடந்த நவம்பர் மாதம் கையெழுத்திட்ட பாதிப்பின் ஆரம்பமே இது என்று கூறப்படுகிறது.தமிழகத்திற்கு 2.96 லட்சம் டன் அரிசியை மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது அதில் 1 லட்சம் டன்னைக் குறைத்ததும், மானிய அரிசியின் விலையை ரூ.8.30-லிருந்து ரூ. 22 ரூபாய் 54 காசுகளாக மத்தியஅரசு உயர்த்தியதும் தமிழகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படித்தான் மானியவெட்டு மூலம், ரேசனில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை குறைத்தார்கள். இப்போது அரிசிக்கு வந்திருக்கிறார்கள். எரிவாயு சிலிண்டருக்குப் போல, உணவுக்கான மானியத்தையும் பணமாக வழங்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ‘உணவுக் கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்- மக்களை வெளிச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கு பழக்க வேண்டும்’ என்று ஏற்கெனவே தங்களின் திட்டத்தையும் அவர்கள் அறிவித்து விட்டார்கள். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உளுந்து, துவரம் பருப்பு, எண்ணெய் நிறுத்தம், அரிசி குறைப்புக்கான காரணத்தை மக்கள்முன் சொல்லத் தயாரில்லை. அந்தளவிற்கு மக்களை வதைக்கும் நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் இணைந்து நடைபோடுகின்றன. http://epaper.theekkathir.org/