பண்பாட்டைப் பாதுகாக்க... கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு தொல்லியல் துறைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டது. ஆயினும் அதற்குரிய நிதியை ஒதுக்குவதில் சுணக்கம் காட்டாமல் உடனடியாக வழங்கினால் ஆய்வு விரைந்து தொடங்க ஏதுவாக இருக்கும். ஏனெனில் இந்தஅனுமதியைப் பெறுவதற்கே மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமுஎகச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலுவாகக் குரல் எழுப்ப வேண்டிய சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி விட்டது. இந்தியாவின் தென்கோடியில் தொன்மையான நகர நாகரிகத்தின் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்த மிக அரிய அகழாய்வு கீழடி. வைகை நதிக்கரையோரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தின் சான்றுகள் ஆய்விடத்தின் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பகுதியிலேயே ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்த ஆய்வு நாட்டின் இதர பகுதிகளில் இல்லை. மதச்சார்பற்ற நாகரிகத்தின் ஆதாரங்கள் பல ஒருபுதிய வரலாற்றுக்கு அச்சாரமிடும் தரவுகள்நிறைந்து உள்ளன. இவை சிந்துச் சமவெளிநாகரிகத்துக்கு நிகரானதாக - மேம்பட்டதாகஇருக்கும் சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.இங்கு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டன. ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருக்கும் தென்னிந்திய - கேரள, தமிழக, ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் கிடைத்த தொல்லியல் சான்றாதாரப் பொருட்கள் உரிய கவனிப்பின்றி இருப்பதாகவே தெரியவருகிறது. இந்த நிலையில் கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களை தமிழகத்திலேயே குறிப்பாக கீழடிக்கு அருகிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாப்பதே சிறப்பாகவும் பொறுப்பாகவும் இருக்கும். அவ்வாறு செய்வது இந்த ஆய்வுக்கு மேலும் உதவிகரமாகவும் அமையும். எனவே அந்தந்த மாநிலங்களுக்கு உரிய வரலாற்றுச் சான்றாதார தொல்லியல் பொருட்கள்,கல்வெட்டுக்கள், பிறநாட்டு வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் இலச்சினைகள், நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை அந்தந்தமாநிலங்களிலேயே பாதுகாப்பதற்கு தொல்லியல் துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதே இத்தகைய ஆய்வுகளுக்கு உதவுவதாகவும் சான்றுகளை பாதுகாப்பதாகவும் இருக்கும்.ஆதிச்சநல்லூரில் சிறிய அளவில் நடந்த அருங்காட்சியக முயற்சியும் கூட அரைகுறையாகவே உள்ளது. எனவே கீழடி அருகே அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு இடம் தந்து நிதி ஒதுக்கி தமிழரின் தொன்மை நாகரிகச் சிறப்பை எடுத்துக்காட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழகஅரசு ஒருவிதமான செயலற்ற நிலையிலிருந்தது மாறி இனியாவது தமிழகத்தின் பழம்பெருமையும் தொன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான திசைவழியில் பயணிக்க தயாராக வேண்டும். அத்துடன் ஆர்எஸ்எஸ் கொள்கையுடன் பிற மொழி, இன, பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடம்தராதஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் ஈடுபடும் மத்திய அரசிடம் வாதாடி போராடி தமிழரின் மாண்புகளை பாதுகாக்க தமிழக அரசு முயன்றிட வேண்டும். இதுவே தமிழ் மொழியை, இனத்தை, தமிழரின் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக தமிழக அரசும் தமிழ்ப் பெருங்குடி மக்களும் ஆற்ற வேண்டிய கடமையாகும். http://epaper.theekkathir.org/