Monday, February 27, 2017

நெடுவாசலும், குறுக்குச்சாலும் ************************ ஜல்லிக்கட்டு பாதுகாப்பு போராட்டத்தின் போது தமிழக பாஜகவினர் ஆளாளுக்கு ஒன்றைபேசி மக்களை குழப்பியது போல புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதிலும் குழப்பி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது; 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த திட்டம் குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது என்று பாஜகவின்தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். இந்த திட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் நடத்தி வருகிற தன்னெழுச்சியான போராட்டத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதுதான் நெடுவாசல் பகுதி மக்களின் விருப்பம் மட்டுமல்ல,தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஓரளவு செழிப்பான பகுதி நெடுவாசலை உள்ளடக்கியப் பகுதிதான். அந்த மாவட்டத்திலேயே ஆற்றுப்பாசனம் இல்லாத நிலையில் நிலத்தடி நீரின் மூலம் ஓரளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கும் வேட்டு வைக்கக்கூடிய வகையில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்துள்ளது. மறுபுறத்தில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு மாநிலம் அழிவதில் தவறில்லை என்கிறார். இதிலிருந்தே தமிழகம் அழிய வேண்டுமென்பதுதான் இவர்களது திட்டம் என்பது தெளிவாகிறது. தமிழகத்தின்சார்பாக மத்திய அமைச்சராக உள்ள பொன்ராதாகிருஷ்ணன் இந்த மாநிலமே அழிந்தாலும் பரவாயில்லை. பன்னாட்டு நிறுவனம் எரிவாயுஎடுத்து லாபமீட்டுவதுதான் முக்கியம் என்கிறார். தமிழகத்திலிருந்து பாஜக என்கிற விஷ விருட்சத்தை அடியோடு வெட்டி எறியவேண்டும் என்பதற்கு இந்த ஒரு காரணம் போதும். தமிழக மக்கள் வாழ்வதற்காக பாஜக என்கிற கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழக இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றுபட்டு மிகுந்த கட்டுப்பாட்டோடும் கண்ணியத்தோடும் நடத்தினார்கள். மோடி அரசுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி இந்த போராட்ட பேரலையில் வலுவாக வெளிப்பட்டது. இதனால் அரண்டு போன பாஜகவினர், அப்போதிருந்த ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தே காவல்துறை மூலம் அந்த போராட்டத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தார்கள்.இதற்கு அவர்கள் சொன்ன காரணம் இந்த போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்பதுதான். இப்போது நெடுவாசல்போராட்டத்திலும் எச். ராஜா அதே புரளியை அவிழ்த்துவிடுகிறார். தேச விரோதிகள் இந்தபோராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்தபோராட்டம் எழுந்து வருவதால் தங்களது வேலையை பாஜகவினர் காட்ட துவங்கியுள்ளனர். உண்மையில் நாட்டை அழித்து தனியாருக்கு தரத்துடிக்கும் தேச விரோதிகள் பாஜகவினர்தான். அவர்களிடம் விவசாயிகள் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். http://epaper.theekkathir.org/