Monday, February 27, 2017

ஊழலில் ஊறிய மட்டைகளா? ஜொலிக்கும் மாணிக்கங்களா? எது வேண்டும் உனக்கு... எழுக தமிழகமே! ***************************************சிபிஎம்பிரச்சாரம்மார்ச்2-6 சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதே சிறையில் அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனும் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இவர்கள் நால்வரும் குற்றவாளிகள். 1991-96 வரை ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களுக்காக இவர்களுக்கு தண்டனை. நான்காண்டுகள் சிறை. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம். ஆனால் இவர்கள் அதிகமாக சொத்து சேர்த்ததற்கு ஒரு காரணம் இருக்கும். ஊழல் செய்து சேர்த்த சொத்தும் லஞ்சம் வாங்கிய பணமும் ஏதோ ஒன்றை முறைகேடாக செய்வதற்கு யாரோ ஒருவருக்கு தகுதியில்லாத ஒன்றை செய்து கொடுப்பதற்காக பெறப்பட்ட சொத்துக்களே இவை. எனவே தான் அவர்களால் இந்த வருமானத்திற்கு கணக்கு காண்பிக்க முடியவில்லை. இவர்கள் பெற்ற லஞ்சத்தால், ஊழலால், முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனால் எந்த நிவாரணமோ, தீர்வோ கிடைக்கப்போவதில்லை. டான்சி வழக்கில் இவர்கள் செய்த தவறுக்கு நீதிமன்றம் ‘பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னது. இவர்கள் பிராயசித்தம் தேடவில்லை. மாறாக பாவங்களையே சேர்த்தார்கள் என்பது அவ்வப்போது புலப்பட்டிருக்கின்றது. இந்த வழக்குகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது தான் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது. இந்த காலத்தில் தான்வோர்ல்டு ராக்கர்ஸ் லிமிடெட் என்கிற வைகுண்ட ராஜன் நிறுவனத்தில் சசிகலாவின் இரண்டு உறவினர்கள் பங்குதாரர் ஆகிறார்கள். இதற்கு பிந்தைய காலத்தில் தான் மிடாஸ் சாராய ஆலையில் 30 சதவிகிதம் பங்கு வைத்திருந்த வைகுண்டராஜனிடமிருந்து முழுமையாக சசிகலாவின் கைகளுக்குப் போய்ச்சேருகிறது, சசிகலாவின் உறவினர்கள் இருவரும்,இன்னும் சிலருமாக 13 நிறுவனங்களை உருவாக்கியிருக் கிறார்கள். அத்தனை நிறுவனங்களுக்கும் ஒரே முகவரி சென்னை, தி.நகரில். தாதுமணல் அள்ள தடைவிதிக்கப்பட்ட இந்த காலத்தில் தான் 9 லட்சத்து 70ஆயிரம் டன் தாது மணல் நெல்லை மாவட்டத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகள் நடந்து கொண்டிருந்த காலத்தில்தான் மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகள் பாளம், பாளமாகபெயர்த்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் கடற்கரையோரத்தில் இருந்த தாதுமணல் கப்பல் கப்பலாக அந்நிய நாடுகளுக்கு முறைகேடாக ஏற்றுமதி செய்யப்பட்டது, தமிழகத்தின் நீராதாரங்கள், குறிப்பாக ஆற்றுமணல் திட்டமிட்டு சூறையாடப்பட்டது, விவசாயிகள் பாசனத்திற்கும், பொதுமக்கள் குடிநீருக்கும் ஏங்கித் தவித்த போது தமிழக ஆறுகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க உரிமம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சிறு குன்றுகளும், மலைகளும் பொடிப்பொடி யாக்கப்பட்டு குவாரிகள் பலநூறாய் பெருகின. தூத்துக்குடி மாவட்டத்தில் சேரகுளம், வெட்டிக்குளம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தனியார் நிலங்கள் ஒட்டுமொத்தமாக மிரட்டிபதிவு செய்யப்பட்டன. சிறுதாவூர், பையனூர் என பங்களாக் களும் கூட மிரட்டி வாங்கப்பட்டதும், புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதும் என புற்றீசல்கள் போல புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் முறைகேடாக நிலத்தடி நீரை தனியார் கொள்ளையடிப்பதற்கு இவர்கள் அனுமதி வழங்கினார்கள், ஆட்சேபித்த மக்களை விரட்டியடித்தார்கள். கொள்ளைக்கு இவர்களின் காவல்துறை துணை நின்றது. அதிமுகவின் அமைச்சரவையிலிருந்த பலபேருக்குவெளிநாடுகளில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாய் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள். சென்னையில் உள்ள ஒரு மிகப்பெரிய மாலில் அதிமுகவின் ஒரு பெண்மணியும், திமுகவின் ஒரு பெண்மணியும் தொழிற்கூட்டுவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி ஊழல் பட்டியல் சொல்லி மாளாது. திமுகவும் கூட இந்த தீர்ப்பை வரவேற்றி ருக்கிறது. ஆனால் இதே 1991-96 காலகட்டத்தில் ஊழல் செய்து தண்டனை பெற்ற இந்திரகுமாரி, மருங்காபுரி பொன்னுச்சாமி, சுடுகாட்டு ஊழல் செல்வகணபதி ஆகியோர் திமுகவில் ஐக்கியமானார்கள். திமுக உச்சிமுகர்ந்து அரவணைத்துக் கொண்டது. திமுகவின் கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விசாரணைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் திமுகவின் பல்வேறு நபர்கள் நில அபகரிப்பில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டார்கள். அவர்கள் எல்லாம் அதிமுகஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சியில் இணைந்து கொண்டார்கள். ஊழல் நபர்களை கொள்வதும், கொடுப்பதும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வெளியே தெரிந்த அரசியல் ஆக்ரோஷங்களுக்கு மத்தியில் மிக ரகசியமாக நடந்துகொண்டேயிருக்கிறது. ஊழல் செல்வகணபதி திமுகவால்தான்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.பாமகவின் சின்ன ஐயா நோய்தீர்க்கும் துறைக்கு பொறுப்பேற்று தகுதியில்லாத நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததற்காக சிபிஐ விசாரணைக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இந்த முதலாளித்துவக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் கட்சி மற்றும் ஆட்சிப்பொறுப்புகளில் உள்ளவர்களின் சொத்துக்கள் எவ்வித தங்கு தடையுமின்றி பெருநிறுவனங்களைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் காட்டுவது ஒன்றைத் தான்... அதிகாரமும், வாய்ப்பும் கிடைத்தால் மிக யோக்கியமானவர் களாக அரசியலுக்குள் வரும் நபர்கள் கூட முதலாளித்துவக் கட்சிகளில் இணைந்த பிறகு முழுக்க ஊழல் மழையில் நனைந்து விடுகிறார்கள். அது அந்தக் கட்சிகளில் இருப்பதற்கான முன் நிபந்தனையாக மாறிப்போய் இருக்கிறது. எனவே தான் உச்சநீதிமன்றத்தின் தண்டனை வரவேற்கத் தக்கது என்றாலும் அதுவே ஊழலுக்கு முடிவு கட்டிவிடாது. அது ஒரு நிவாரணம். தீர்வு வேரிடத்தில் இருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் லஞ்சம், ஊழலுக்குஎதிரான அறச்சீற்றத்தை, ரௌத்திரத்தை, மோதி மிதிக்கும்குணத்தை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.நேர்மை, நியாயம், சட்டத்திற்கு உட்படுதல் இவையனைத்தை யும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கரையானைப் போல,புற்றுநோயைப் போல ஒவ்வொரு பாகத்திலும் அரித்து சிதில மடையச் செய்துள்ளார்கள். இவையெல்லாம் தனிநபர்களின் பலவீனத்தால் மட்டும் ஏற்பட்டவை அல்ல. அந்த கட்சிகளின் அமைப்பு முறை, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் நபர்களை நிறுத்துவதற்கு கடைபிடிக்கும் வழிமுறை, தேர்தலை அணுகும் முறை, அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை - இவற்றிற்குள் இருக்கிறது லஞ்சத்திற்கும், ஊழலுக்கும்,முறைகேட்டிற்குமான ஊற்றுக் கண். இதைப் பாதுகாப்பதற்கான வன்முறைகள், காவல்துறையினை அடியாட்களாக பயன் படுத்தும் வழிமுறைகள், நிர்வாகத்தை கட்சி மற்றும் ஆட்சி யில் பொறுப்பில் இருப்போரின் வேலைக்காரர்களாக மாற்றும் முறை - இவையெல்லாம் இவற்றோடு பின்னிப் பிணைந்தது. ஏன் இவ்வளவு பேரும் இத்தனை கட்சிகளும் ஊழலில்திளைக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை தனிநபர்பலவீனங்களிலும், சொகுசுகளில் மட்டும் அடங்கியிருக்க வில்லை. மாறாக அந்த கட்சிகளின் உள்ளுறைத் தன்மையாக இது அமைந்திருக்கிறது. எனவே தான் அந்தக் கட்சிகளுக்கு மிகுந்த நம்பிக்கை யோடும், நேர்மையோடும் வருகிற இளைஞர்களும் கூட அந்த நடைமுறைகளின் ஊடாக ஊழல்வாதிகளாக ஊழலும், லஞ்சமும் தவறு என்கிற நற்குணம் சிறிதும் அற்றவர்களாக மாறிப் போய் வருகிறார்கள். இவையெல்லாம், அவர்கள் சொத்து சேர்த்து விட்டார்கள் என்பதோடு மட்டும் முடிந்து விடுவது அல்ல. மாறாக, இந்த சொத்துக்களை சேர்ப்பதற்காக அவர்கள் கடைபிடித்த வழிமுறைகள், அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தகுதியான நபர்கள், அவர்கள் அடித்த கொள்ளைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. உணவுத்துறை அமைச்சர் கொள்ளையடித்தால் தமிழக மக்கள் ஒவ்வொருவருடைய சாப்பாட்டிலிருந்து திருடப்பட்டது என்று பொருள். ஆறுகளை ஒட்டச் சுரண்டி 650 ரூபாய் ஒரு யூனிட் மணல் என்று மோசடியாக அறிவித்து விட்டு, ஒரு யூனிட் மணலை ரூ. 7000, 8000க்கு விற்பதால் அந்த மணலை பயன்படுத்துகிற ஒவ்வொருத்தர் பாக்கெட்டிலிருந்தும் திருடப்பட்ட தொகைகள் தான் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருப்பவர்களுக்கும் அதை சேகரித்து கொடுக்கிற அதிகாரிகளுக்கும் அவர்கள் இருக்கிற கட்சியின் தலைவர் களுக்கும் செல்லும் பணமாக இருக்கிறது. கடலோரங்களில் திருடிக் கடத்தப்பட்ட தாதுமணல் வளங்கள், அரசால் விற்கப்பட்டு அரசு கஜானாவிற்கு வந்திருந்தால் அவையெல்லாம் சாலை அமைக்க, குடிநீர் கொடுக்க, மருத்துவமனையை பலப்படுத்த, கல்வி நிறுவனங்களை மேம்படுத்த பயன்பட்டிருக்கும். ஆனால் அவையெல்லாம் இன்றைக்கு தனிநபரின் நிறுவனங்களாக மாறிப்போயிருக்கின்றன. பி.ஆர்.பி. குழுமம் கடத்திய மலைகளால் கிடைத்த வருமானங்கள் லட்சக்கணக்கான கோடி என பேசப்படுகிறது. அவையெல்லாம் நலத்திட்டங்களாக, வளர்ச்சித் திட்டங்களாக, மானியங்களாக, தமிழக மக்கள் ஏழரை கோடிப் பேருக்கும் சென்றிருக்க வேண்டிய பயன்களாகும். அவையெல்லாம் மறுக்கப்பட்டதாயிற்று. நீதிமன்றம், தவறு செய்த சிலருக்கு தண்டனை கொடுத்திருக்கிறது என்பதைத் தவிர அதனால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்துவிடப் போவதில்லை. நீதிமன்றத் தண்டனையால் ஊழல் குற்றங்களும் குறைந்துவிடப் போவதில்லை. மாறாக கறப்பதற்கு புதிய வழிகளையும், தப்பிப்பதற்கு புதிய முறைகளையும் அவர்கள் கண்டுபிடிப்பார்கள். ஏனெனில் லஞ்சமும் - ஊழலும் - முறைகேடுகளும் முதலாளித்துவக் கட்சிகளின் இருத்தலுக்கு உணவளிக்கும் உரம்போடும் கூறுகள். அவையின்றி அவற்றால் உயிர் வாழ முடியாது. நவீன தாராளமயம் இயற்கை வளங்கள், பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதையே கொள்கையாக மாற்றியிருக்கிறது. இந்த நடைமுறையில் ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருநிறுவனங்களின் கூட்டு செழித்து நிற்கிறது. எனவே ஊழலுக்கான மாற்று, தடுப்பு, தண்டனைகளில் அடங்கியிருக்கவில்லை. அரசின் கொள்கைகளில் இருக்கிறது; கட்சிகள் நடத்தும் முறைகளில் இருக்கிறது. தேர்தலை அணுகும் முறையில் இருக்கிறது. தனிநபர் வழிபாடுகளில் இருக்கிறது. இதோ ஜெயலலிதா இரண்டாவது முறையாக சிறைக்குப் போய்விட்டு வந்த பிறகு 30 ஆண்டுகளில் இல்லாத முறையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் அவர் வழியில் தான் அரசு நடக்கும் என்று அதிமுகவின் மூன்று கோஷ்டிகளும் பேசித்திரிகிறார்கள்.தமிழகத்தின் கூட்டு மனச்சாட்சி தனி மனித மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதாக கட்டமைக்கப்படுவதே இதற்குக் காரணம்.எனவே தண்டனைகளால் தடுக்க முடியாது. மாறாக அரசுக் கொள்கைகள் என்பவை கட்சியின் கொள்கைகளில் அடங்கியிருக்கிறது. பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் மிக உயர்ந்த பொறுப்புக்களை வகித்த பல தனி நபர்கள் மிக யோக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் விதிவிலக்குகளே. மாறாக, இந்தியாவில் ஒரு கட்சியின் சார்பாக 9 முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். 9 பேர் மீதும் ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை என்பதும், இதில் ஒருவர் தன்சொத்துக்கள் முழுவதையும் முதலமைச்சராகும் முன்பே கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர் என்பதும், மற்றொருவர் பொது மக்களுக்கான சேவையில் திருமணமே செய்துகொள்ளாதவர் என்பதும், மற்றொருவர் இந்தியாவின் முதல் ஆதிவாசி முதலமைச்சர் என்பதும் தற்செயலானது அல்ல. தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஜோதிபாசு, இ.கே. நாயனார், புத்ததேவ் பட்டாச்சார்யா, நிருபன் சக்கரவர்த்தி, வி.எஸ். அச்சுதானந்தன், தசரத்தேவ், மாணிக் சர்க்கார், பினராயி விஜயன் என்கிற இந்த மாணிக்கங்கள் அத்தனை பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்பதும், ஊழியர்கள் என்பதும் மிக முக்கியமான அம்சங்கள்.ஒரு கட்சியின் அத்தனை முதலமைச்சர்களும் ஊழல்கறை தீண்டமுடியாதவர்களாக இருப்பதும் எல்லா கட்சிகளி லும் பெரும்பாலானவர்கள் ஊழலில் திளைத்தவர்களாக இருப்பதும்தற்செயலானது அல்ல. தனி மனிதர்களின் பலம் - பலவீனங்கள், நல்ல குணம்- கெட்ட குணம் சம்பந்தப்பட்டது அல்ல. அது அந்தந்தகட்சிகளின் குணத்தோடும், கொள்கையோடும் சம்பந்தப்பட்டது. மோசமான மரங்கள் நல்ல கனிகளைத் தந்து விடுவதில்லை. நல்ல மரத்தின் கனிகள் மோசமாக இருப்பதில்லை. எனவே கட்சிகளின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே ஊழலா, நேர்மையா என்பதைத் தீர்மானிக்கின்றன.இதோ தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக ஒரே குரலிலும், உரத்த குரலிலும் பேசுவதோடுமட்டுமின்றி நடைமுறையிலும் சாதித்துக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்த முடியும்; ஊழலை வேரறுக்க முடியும்.எனவே தான், எழுக தமிழகமே! எம்மோடு இணைக தமிழகமே! நம் தமிழகத்தை தலைநிமிரச் செய்யும் பணியில் இணைந்தே செயல்படுவோம், இணைந்தே சாதிப்போம் என்று அறைகூவி அழைக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஊழலை வேரறுருப்போம், ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம், ஊழலின் ஊற்றுக்கண்ணை முற்றாய் கருவறுப்போம் என்கிற முழக்கம் ‘எழுக தமிழகமே! மார்ச் 2 - 6 பிரச்சார இயக்கத்தில்’ முக்கியமான முழக்கங்களில் ஒன்றாய்திகழ்கிறது. எழுவோம் தமிழகமே! கட்டுரையாளர்: மாநிலசெயற்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்) http://epaper.theekkathir.org/