ஊழல், கொள்ளை என ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இபிஎஸ், ஓபிஎஸ் பற்றி ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் சிதம்பரம், பிப்.23- தமிழகம் தழுவிய அளவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ள அரசியல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் கடலூரில் புதனன்று (பிப்.22) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சிறப்புரையாற்றிய ஜி. ராமகிருஷ்ணன், “பருவ மழை பொய்த் துப் போனதால் தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. சாகுபடி செய்த பயிர்களை இழந்து விவசாயிகள் நிவாரணத்திற்காகக் காத்துக்கிடக்கின்றனர். குடிநீருக்குக் கூட பஞ்சம் ஏற் பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய மத்திய - மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன,” என்றார்.“உயர்ந்த கொள்கைகளுக் காக அல்ல, ஊழல் கொள்ளைகளுக்காகவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அதிகாரச் சண்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களை அம்பலப்படுத்திட, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நலன் காக்கும் கொள்கைகளை முன் வைத்து இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது,” என்றும் அவர் கூறினார்.தமிழகத்தில் கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் 20 விவசாயிகள் உயிரிழந்துவிட்டனர். ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கப் படுகிறதே, இதற்கு நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டாமல் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும், அதிகாரத்தை கைபற்றவும் போட்டி போட்டுகொண்டு அவசரம் காட்டுகிறார்கள் என்று அவர் விமர்சித்தார்.இந்தியாவிலே அதிக மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலம் தமிழ்நாடு. தற்போது சட்டம் போட்டு ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது. இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. ஒரே கவலை கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி கொள்ளையடிப்பதுதான்.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள்தான் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.சிறையில் இருந்து கொண்டே ஆட்சியையும்,கட்சியையும் சசிகலா ஆட்டி படைக்கிறார். இப்போதுள்ளநிலைமையில் பாஜக குழம்பியகுட்டையில் மீன்பிடிக்க முயல்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைத்து பெரும்பான்மையை நிரூபித்தது ஜனநாயகமல்ல. அதேவேளையில் ஓபிஎஸ்நேர்மையானவரா? இவருக்கு பினாமியாக இருந்த சேகர்ரெட்டி வீட்டில் 100 கிலோ தங்கம், பல கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டுக்கும் கொள்ளைகளில் வித்தியாசம் இல்லை என்றார் ராமகிருஷ்ணன். ஸ்டாலின் நடவடிக்கைகள் பிப்ரவரி 17 வரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எடுத்த முடிவுகள் சரியாக இருந்தன. பின்னர் அவர்களுடைய சட்டசபை நடவடிக்கைகளை யாரும் ஆதரிப்பதற்கில்லை. இபிஎஸ்சுக்கு மாற்று ஓபிஎஸ்சோ, திமுகவோ இல்லை. இவர்கள் ஊழல், கொள்ளை என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மக்கள் நலன் காக்க மாற்றுக் கொள்கைகளை முன்வைத்துப் போராடுகிற மார்க்சிஸ்ட் கட்சிதான் உண்மையான மாற்று என்றும் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், கற்பனைச் செல்வம், முத்துவேல், உதயகுமார், மருதவாணன், மாதவன், கருப்பையன், ரமேஷ்பாபு, ராமச்சந்திரன், திருஅரசு உள்ளிட்டோர் பேசினர். நகரச் செயலாளர் சுப்புராயன், ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், சிப்காட் பகுதி செயலாளர் ஆளவந்தார் முன்னிலை வகித்தனர். முன்னதாக புதுவை சப்தர் ஹஷ்மி குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. http://epaper.theekkathir.org/