தொழில் வளர்ச்சியா? வாழ்வாதார அழித்தொழிப்பா? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ளது நெடுவாசல். தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி நல்ல மண்வளம் நிறைந்த பகுதியாகும். நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இங்குபயிரிடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி.நிறுவனம் இப்பகுதியில் இரண்டு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி இயற்கை எரிவாயு சோதனைக்காக (ஹைட்ரோ கார்பன்) சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தது. அப்போதே கிராம மக்கள்திரண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எரிவாயு சோதனை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்காக மேலும் சிலரின் இடங்களை கையகப்படுத்த முயன்றபோதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சம்மதிக்க மறுத்தனர்.இந்நிலையில் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நெடுவாசல் பகுதி விவசாயிகளிடம் எவ்வித கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. தங்களின் கருத்துக்களை கேட்காமலும், திட்டம்குறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமலும் இத்திட்டத்துக்கு மத்தியரசு ஒப்புதல் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்,கையெழுத்து இயக்கம் என பலகட்டப்போராட்டங்களை நடத்தத் துவங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவுதெரிவித்துள்ளன. முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அனால் மாவட்டநிர்வாகம் இதுவரை அவர்களிடம் எந்த பதிலையும் சொல்லவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீர்மட்டம் முற்றிலும் குறைந்து விவசாயம்அழிந்துவிடும் என்று கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடிபாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்றுவருகிறது. அதற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. தமிழகத்தில் தற்போதுதான் அதிகார சண்டை தற்காலிகமாக முடிந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅரசு பதவியேற்றுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவிரிபடுகையின் விவசாயத்தை நாசமாக்க இருந்த மீத்தேன் திட்டத்தை கடுமையாகஎதிர்த்தார். மத்தியில் திமுக ஆட்சியில் இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்ட அந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியில்லாமல் மத்திய அரசு அத்திட்டத்தை கைவிடவேண்டியதாயிற்று. தற்போது அதே காவிரி படுகையின் ஒரு பகுதியாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை ஹைட்ரோ கார்பன் திட்டம் மிரட்டிக்கொண்டிருக்கிறது. எனவே இந்ததிட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு அதை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் அழிந்துபோகும். தொழில் வளர்ச்சி கூடாது என்றோ அல்லதுபூமியில் புதைந்துகிடக்கும் இயற்கை வளங்களைஎடுக்கக்கூடாது என்றோ யாரும் சொல்லவில்லை. மாறாக இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்தைதான் கூடாது என்கிறார்கள். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடவேண்டும், மாநில அரசும் அதற்கான அழுத்தத்தை அளிக்கவேண்டும். http://epaper.theekkathir.org/