Thursday, February 23, 2017

480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்க! அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல் சென்னை,பிப்.23- 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் மாநில மாநாடு சென்னையில் வியாழனன்று (பிப். 23) நடைபெற்றது. மாநாட்டில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஏஐடியுசி அகில இந்திய செயல் தலைவர் எச்.மகாதேவன், எச்.எம்.எஸ். அகில இந்தியத் துணைத் தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர், எல்.பி.எப் அகில இந்திய பொதுச்செயலாளர் மு.சண்முகம், பி.எம்.எஸ். அகில இந்திய செயலாளர் எஸ்.துரைராஜ், ஏஐயூடியூசி மாநிலத் தலைவர் அ.அன் வரதன், எம்.எல்.எப். தலைவர் ஆர்.அந்திரிதாஸ், உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் ஆர்.குசேலர் ஆகியோர் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.மாநாட்டில் தமிழ்நாடு நிரந்தரத் தகுதியளிக்கும் சட்டம், 1982ன் கீழ் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து வகையான தொழில்களிலும் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சமமான வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மொத்த தொழிலாளர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்களை வைத்துக் கொள்ளக் கூடாது, 6 மாதத்திற்கு மேல் பணி செய்பவரை பயிற்சியாளர் என்று கூறக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. http://epaper.theekkathir.org/