Saturday, February 25, 2017

காலிப்பணியிடங்களை நிரப்புக! சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துக! குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர் மாநாடு வலியுறுத்தல் *************** கோயமுத்தூர், பிப். 25 – சட்ட சமூக பாதுகாப்பின்றி பல ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர் மத்திய அமைப்பின் மூன்றாவது மாநில சிறப்பு மாநாடு பொள்ளாச்சியில் வேணுகோபால் நினை வரங்கத்தில் சனியன்று நடைபெற்றது. மத்திய அமைப்பின் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை சங்கத்தின் உதவித்தலைவர் சி.அய்யப்பன் ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழு தலைவர் மா.ஆத்மநாபன் வரவேற்றார். சங்கத்தின் மத்திய அமைப்பின் பொருளாளர் வி.அழகுமலை மாநாட்டை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டு பிரதிநிதிகள் விவாதித்தனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், உதவி தலைவர் வி.பெருமாள், பொள்ளாச்சி சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் உதவி தலைவர் இ.பொன்முடி சிறப்புரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் மோ.பாலகுமார் பேசினார். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.சரவணன் நன்றி கூறினார். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யப்பட வேண்டும், இதுகுறித்து அந்தந்த மாவட்ட தொழிலாளர்துறை நீதிமன்றங்கள் வழங்கப்பட்ட சாதகமான தீர்ப்புகளை உடனடியாக அமலாக்கப்பட வேண்டும், அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் சீராக விநியோகம் செய்திட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும், அவுட்சோர்சிங் என்கிற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை பணியமர்த்துவதை கைவிட ேண்டும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 300 ஆய்வக ஊழியர்களுக்கு உடனே வேலை வழங்கு, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் சங்கத் தலைவர்கள் மீது தொடுக்கப்படும் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு நிகழ்வில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர் http://epaper.theekkathir.org/