Saturday, February 25, 2017

நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வருடன் இன்று சந்திப்பு? ********************************புதுக்கோட்டை, பிப். 25 - நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஞாயிறன்று முதல்வரை சந்திக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இது விவசாயத்தை நாசமாக்கி, 5 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கை என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நெடுவாசலை நோக்கி வரும் அவர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. சனிக்கிழமையன்று நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். நெடுவாசல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, ஆவணம், வடகாடு, கருக்காகுறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றது. பேரணி சென்ற இடமெல்லாம், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்று விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் நெடுவாசல் கிராம மக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “மீத்தேன் திட்டத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா; கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டபோதும் ஜெயலலிதா எதிர்த்தார்; அந்த வகையில், விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட எங்களது அரசு, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் விஷயத்திலும் விவசாயிகள் நலனை காப்போம்” என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.நெடுவாசல் பிரச்சனை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் எடுத்து சொல்லியிருப்பதாகவும், நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வரை சந்திப்பார்கள் என்று கூறிய விஜயபாஸ்கர், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டுக்கொள்ளும் முதல்வர், பிரதமரைச் சந்திக்கும் போது, நெடுவாசல் பிரச்சனை பற்றி பேசுவார் என்றும் தெரிவித்தார். http://epaper.theekkathir.org/