தொழிலாளர்களை கசக்கிப் பிழிய விரைவில் சட்டத்திருத்தம் ஏற்றுமதியாளர் சங்கத்தாரிடம் மத்திய அமைச்சர் உறுதி ******************** திருப்பூர், பிப்.25 – தொழிலாளர்களின் மிகை நேரம் (ஓவர்டைம்) வேலை அளவை இருமடங்காக அதிகரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளார்.கோவை தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) நிகழ்வில் வெள்ளியன்று பங்கேற்றமத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொது ச்செயலாளர் டி.ஆர்.விஜயகுமார், துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஈ.பழனிசாமி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பின்னலாடை ஏற்றுமதி தொழிலில் மிகைநேர வேலை அளவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போதுள்ள சட்டப்படி, காலாண்டிற்கு ஒரு தொழிலாளியிடம் அதிகபட்சம் 50 மணி நேரம்தான் மிகைநேரம் (ஓவர்டைம்) வேலை வாங்க வேண்டும். அதை இரு மடங்காக அதாவது மூன்று மாதங்களுக்கு 100 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதிலளித்த அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “இது குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்து விரைவில் மிகைநேரம் அதிகரிக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்ததாக விஜயகுமார் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.தற்போது நடைமுறையில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் தொழிலாளர்களிடம் சட்டத்தை விட கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுகிறது. எனினும் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் சட்டப்படி வேலை வாங்குவதாகக் கூறப்ப டுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக தொழிலாளர்களை கூடுதல் வேலைவாங்குவதாக வெளிநாட்டு வர்த்தகர்கள் அறிந்தால், வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடும். எனவே சட்டப்படி நடப்பதாக காட்டிக் கொள்வதற்காக, தற்போதுள்ள கடுமையான வேலை நேரத்தையே சட்டமாக மாற்றிவிட ஏற்றுமதியாளர்கள் விரும்புகின்றனர். திருப்பூர் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஏற்றுமதித் துறையில் இருக்கும் முதலாளிகள் தொடர்ந்து பலஆண்டு காலமாக இதை வலி யுறுத்தி வருகின்றனர்.எனினும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த காலத்தில் மிகை நேர சட்டத்தை மாற்ற முடியவில்லை. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக உள்ளது. அதன்படியே மிகைநேர வேலை அளவை இரண்டு மடங்காக்கவும் சட்டத் திருத்தம் கொண்டு வர உள்ளனர்.இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும்பட்சத்தில், தற்போது நடைமுறையில் இருக்கும் அதிக வேலைநேரத்தை விட, மேலும் கூடுதல் நேரம் தொழி லாளர்களை கசக்கிப் பிழியும் வாய்ப்பையும் ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.இத்துடன் நடப்பில் உள்ள 44 தொழிலாளர் உறவு தொடர்பான சட்டங்களைத் தொகுத்து நான்கு வழிகாட்டு நெறிமுறைகளாக மாற்றப் போவதாகவும் கோவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தில்லி திரும்பியவுடன் திருப்பூரில் நூறு படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட ரூ.150 கோடி அனுமதிக்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து 200 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.கோவை வட்டார ஜவுளித் தொழில் சார்ந்த அமைப்புகளை தில்லிக்கு வரவழைத்துப் பேசி தொழில்நிலவரம் குறித்து கேட்ட றிய இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.