டாக்டர் ஷிவாகோ மீது விமர்சனம் ஏன்? - கே.ஏ.தேவராஜன் கலையும் இலக்கியமும் யாருக்காக?மக்களுக்காகவா? அல்லது பொழுதுபோக்குவதற்காகவா? இந்த விவாதம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக - இன்னும் நீடிக்கவே செய்கிறது.உலக அளவில் பிரெஞ்சு இலக்கியம் பெயர் போனது. கலை கலைக்காகவே பொழுது போக்குவதற்காகத்தான் என்ற அணியினர் அங்கு அதிகம். அந்த அணியின் புகழ்பெற்ற எழுத்தாளர் தீயோபில் கன்ட்டியர், ‘ராபேல் வரைந்த குழு ஓவியத்தையும், ஓர் அழகான பிரெஞ்சு யுவதியை நிர்வாணமாகப் பார்க்கும் பாக்கியமோ எனக்குக் கிடைக்குமானால் பிரெஞ்சுக்காரன் என்ற பிரஜா உரிமையையும் இழக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.கிட்டத்தட்ட இவர்களும், இவர்களைப் போன்றவர்களும் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்கிற பூக்களைப் போன்ற உமர்கய்யாம் கொற்கை வாதிகள்தாம்.ஆனால், சோஷலிச எண்ணம் கொண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்ற உன்னத லட்சியத்துடன் உயர்ந்த இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள்.லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செக்காவ், நிகோலாய் ஆல்டிவாவ்ஸ்கி, புஷ்கின் போன்ற புகழ்பெற்ற இலக்கிய ஜாம்பவான்கள் அவதரித்த அதே சோவியத் மண்ணில் தான் போரிஸ் பாஸ்டர் நாக் என்ற எழுத்தாளரும் பிறந்தார். அவர் எழுதிய ‘டாக்டர் ஷிவா கோ’ என்ற நாவல் ஏன் கடுமையான விமர்சனத்திற்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாயிற்று?கதையின்படி ஷிவாகோ ஓர் இளம் டாக்டர்.ஆம். பயிற்சி பெற்ற டாக்டர். ஆனால் இயல்பாகவே கவித்துவ மனம் கொண்டவர். நல்ல இயற்கை ரசிகர். நீலவானில் நிலவின் பவனியைப் பார்த்து மகிழ்பவர்; வண்ண வண்ண குளிர் மலர்களின் அழகில் மூழ்குபவர்; தென்றலின் மென்மையை வருடுபவர்; அழகு மங்கையரை ஆராதிப்பவர். இதுதான் அந்த இளம் டாக்டர் ஷிவா கோவின் இயல்புகள். ஆனால், தொழில் முறையில் பயிற்சி முடித்த ஒரு டாக்டர்.போர்க் களத்தில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கும், யுத்தத்தால் படுகாயமடைந்த மக்களுக்கும் மருத்துவ சேவை அவசியத் தேவை என்று வருகிறபோது இளம் டாக்டர்கள் யுத்த முகாம்களுக்கு அரசால் அனுப்பப்படுகிறார்கள். அவர்களில் டாக்டர் ஷிவாகோவும் ஒருவர். ஆனால் அவருக்கு போக விருப்பம் இல்லை. கட்டாயத்தின் பேரில் வேண்டா வெறுப்பாகச் செல்கிறார்.மற்ற இளம் டாக்டர்கள் எல்லோரும் யுத்தக் களத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் துடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இருக்கும் போது, ஷிவா கோ மட்டும் முகாமில் தனது அறையில் தனியாக அமர்ந்து கவிதை எழுதும் பணியைச் செய்வார். அழகு ரசனையிலும் கற்பனையிலும் ஆழ்ந்திருப்பார் இந்த டாக்டர். இதுதான் இவர்மீதான விமர்சனம்.சோசலிச ஆட்சியில் கம்யூனிஸ்ட்டுகளின் பொருத்தமற்ற வேலைப் பிரிவினைகளின் திணிப்பு, கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் சர்வாதிகாரம், தனி மனித சுதந்திரம் மறுப்பு இருந்ததாகச் சொல்வதுதான் அந்த நாவலின் சாராம்சம். இந்த நாவலுக்கு சோவியத் யூனியனில் கடுமையான விமர்சனம். எதிர்ப்பு. போரிஸ் பாஸ்டர் நாக் தனிமைப்பட்டார். அவ்வளவுதான் சிஐஏ-யின் மூக்கு வியர்த்தது. நாவலும் கடத்தப்பட்டது. நபரும் கடத்தப்பட்டார். உலகின் பலமொழிகளிலும் ‘டாக்டர் ஷிவாகோ’ அச்சாகி வெளிவந்தது. ஹாலிவுட் எம்.ஜி.எம். நிறுவனம் சினிமா எடுத்து உலகமெங்கும் ரிலீஸ் செய்தது. போரிஸ் பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசும் அளிக்கப்பட்டது.கலையும் இலக்கியமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல என்பது மெய்பிக்கப்பட்டது. ‘டாக்டர் ஷிவாகோ’ எனும் நாவல் மீதான சோவியத் மக்களின் எதிர்ப்பும் விமர்சனமும் சரியானது. நியாயமானது என உலகம் ஒப்புக்கொண்டது. http://epaper.theekkathir.org/