This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 2, 2017
மக்களுக்குத் தேவை தண்ணீர்; கோக்-பெப்சி அல்ல...! ************************************ வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆற்றுநீர், ஊற்று நீர், உப்பு நீர், ரயில் நீர் எது கிடைத்தாலும் போதும் என்று மக்கள் ஆலாய்ப் பறக்கின்றனர். சுத்தமான குடிநீர் வேண்டுமென்று இப்போது யாரும் எதிர்பார்ப்பதில்லை. கால்நடைகள், விலங்குகள் குடிக்கத் தண்ணீரின்றி, செத்து விழுந்து கொண்டிருக்கின்றன. காற்றும், நீரும் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. அதனால் தான், ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர். மனித குலம் உயிர்வாழ தவிர்க்கவே முடியாத தண்ணீர் வளத்தைப் பாதுகாப்பதில், அரசுக்கு முக்கிய பொறுப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவில் தென்மேற்குப் பருவமழையில் 19 சதவீதமும், வடகிழக்குப் பருவமழையில் 62 சதவீதமும் குறைவாக பெய்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்ததே, மழை வேண்டாம், வேண்டாம் என மக்கள் கதறி வேண்டிக் கொண்டனரே? அந்த மழைநீர் முழுவதும் எங்கே?தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையும் அதற்கு விதிவிலக்கல்ல! சென்னை நகர குடிநீர் தேவைக்கு ஆண்டு தோறும் 11 டி.எம்.சி தண்ணீர் தேவை. 2015ஆம் ஆண்டுபெய்த மழையில் மட்டும் கடலில் சென்று கலந்த நீரின் அளவு 300 டி.எம்.சி. அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீரை கடலில் கலக்கச் செய்துவிட்டது அதிமுக அரசு. இதைவிட மாபாதகச் செயல் வேறு இருக்க முடியுமா? இது தான் சிறந்த நிர்வாகத்தின் லட்சணமா?தூர் வாருவதாகச் சொல்லி ‘ஷேவிங்’ செய்தவர்கள்ஆண்டுதோறும் பெய்யும் மழைநீரில் 80 சதவீதம் வீணாக்கப்படுகிறது. பெய்யும் மழைநீரை சேமித்துப் பாதுகாக்க பாரம்பரியமாக உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்காமல் மண்மேடிடச் செய்து தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் செய்த குற்றவாளி திமுகவும், அதிமுகவும். தூர்வாருவதாக சொல்லி ஒதுக்கிய பணத்தையெல்லாம் ஏரி, குளம், குட்டைகளுக்கு ‘ஷேவிங்’ செய்துவிட்டு (மண்ணை லேசாக சீவிவிட்டு) தங்களுக்குள் ஒதுக்கிக் கொண்டவர்கள், ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகள் துணையுடன் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விற்பனை செய்தவர்கள், ரியல்எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்கி வரத்து வாய்க்கால்களை வளைத்துக் கொண்டவர்கள் இரு கட்சிகளையும் சார்ந்தவர்கள் தான். மேட்டூர் அணை, 1934ஆம் ஆண்டு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. எண்பது ஆண்டுகளுக்கு மேலான பிறகும் இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் 20 அடிகளுக்கு மேல் வண்டல் படிந்து அதன் முழு கொள்ளளவு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளின் நிலையும் இதுதான். எந்தவொரு நீர்நிலையும் அதன் முழு கொள்ளளவு திறனுடன் இன்று இல்லை. பாசன மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நீண்டகாலமாக கிடப்பிலே போடப்பட்டுள்ளன. அவினாசி - அத்திக்கடவு திட்டம், காவிரி- வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரியில் 16 இடத்திலும், கொள்ளிடத்தில் 7 இடத்திலும் கதவணைகள் அமைக்கும் திட்டம் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். தமிழ்நாட்டில் விவசாயம் 60 சதவீதம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தித்தான் நடைபெறுகிறது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நிலத்தடி நீர்வளம் பெருகுவதுடன், கிணறுகள், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும். மழை பெய்யாதது இயற்கையின் குற்றம். ஆனால் பெய்த மழைநீரை சேமித்து பாதுகாக்காதது மனிதனின் குற்றம். ஆட்சியாளர்களின் அலட்சியம். கடந்த 50 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சியிலிருந்த திமுகவும், அதிமுகவும் தான் இந்த நிலைமை உருவாக காரணமான குற்றவாளிகள். இந்த குற்றம் சுலபத்தில் சரி செய்ய முடியாத குற்றம் என்பதை அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. இயற்கை நீதிக்கு முரணான தீர்ப்பு தமிழகத்தின் நெற்களஞ்சியம் அரிசிக்காகக் கையேந்தும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. ரேசன் அரிசி இல்லையென்றால் பட்டினிச்சாவு தான் என்ற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பன்னாட்டுக் கம்பெனிகளின் குளிர்பான உற்பத்திக்கு தடையில்லாமல் தண்ணீர், ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு, நீச்சல் குளங்களுக்கு தாராளமாக தண்ணீர் வழங்கப்பட்டுக் கொண்டிக்கிறது. கங்கைகொண்டானில் கோக்ககோலா கம்பெனி தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணியிலிருந்து பாசனத்திற்காக மட்டுமில்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பன்னாட்டு குளிர்பான கம்பெனி தடையின்றி தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு இயற்கை நீதிக்கு புறம்பானது. கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம் குன்றிப் போகிறது என்று சொல்லி அதை வேரோடு அழிப்பதற்கு உத்தரவிட்ட இதே உயர்நீதிமன்றம், ஆற்றில் ஓடும் தண்ணீரை தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர்கள் ஒரு கம்பெனி எடுத்துக் கொள்வதால் நீர்வளம் பெருகும் என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. முதலில் குடிதண்ணீர், இரண்டாவது விவசாயம், மூன்றாவதாக தொழிற்சாலைகளுக்கு என்பதை மாற்றி முதலில் தொழிற்சாலைகளுக்குத் தான் என்று இந்த தீர்ப்பின் மூலம் புதிய இலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இது அநியாயம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தால் நிச்சயமாக தலையிட்டிருப்பார்கள். ஆனால், மக்களைப் பற்றி கவலைப்படாதவர்களாக இருப்பதனால் தான் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். தூர்வாரும் பணியில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். நமது பாரம்பரியமான நீராதாரங்களை பாதுகாக்க பராமரிப்பை மேம்படுத்த எழுக தமிழகமே! தண்ணீருக்கான போராட்டம் தமிழகமெங்கும் விரைவில் வெடிக்கட்டும். கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)இ-மெயில்-யீளவசiயெட@பஅயடை.உடிஅ http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
