SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 2, 2017

17 ஆயிரம் தொழிலாளர் கடிதங்கள் பிரசுரம்.. *****************************. ‘தொழிலாளர்கள் இஸ்க்ராவை ஆவலோடு வாசித்தனர். ஒவ்வொரு இதழும் கைமாறிக்கொண்டே இருந்தது. அது கிழிந்து கந்தலாகிப் போகும்வரை மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது. நான் பல தோழர்களுக்கும் இஸ்கராவைப் படிக்கத் தந்தேன். பத்திரிகை முழுவதும் பொத்தலாகிவிட்டது. ஆனாலும் அது விலை மதிப்பில்லாதது. அதிலே நமது இயக்கம் முழுவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கோபெக்குகளால் (ரஷ்ய நாணயம்) மதிப்பிட முடியாது. தொழிலாளர்களாகிய எங்களையும், எவர்களை நாங்கள் பின்பற்றுகிறோமோ அந்த அறிவுலக மேதைகளையும் கண்டு அரசியல் போலீசாரும் சாதாரண போலீசாரும் ஏன் அஞ்சுகிறார்கள் என்பதை அதைப் படிக்கும்போது புரிகிறது’ என்று எழுதினார் நெசவாலைத் தொழிலாளி ஒருவர். இஸ்க்ராவை ரஷ்யாவிலேயே அச்சிடுவதற்காக பாக்கூ, கிஷினெவ் ஆகிய நகரங்களில் ரகசிய அச்சுக்கூடங்கள் நிறுவப்பட்டன. லெனினின் முன்முயற்சியினால் அவரது தலைமையில் இஸ்க்ராவுக்கு உதவும் குழுக்களும் விற்பனை முகவர்களும் ரஷ்யாவில் உருவாயினர். அவர்கள் இஸ்க்ராவை நாடெங்கும் பரவச்செய்தனர். அவர்கள் இஸ்க்ராவுக்குக் கட்டுரைகளும் செய்திகளும் அனுப்பினர். பத்திரிகைக்கு நிதியும் திரட்டி உதவினர். போலீஸாலும் உளவாளிகளாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுத் தொல்லைக்கு உள்ளானபோதிலும், அவர்கள் துணிச்சலான - தன்னலமற்ற - அபாரமான தொண்டுபுரிந்தனர். கைதுசெய்யப்பட்டால் உடனே அவர்களுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனையும் தீவாந்தரத் தண்டனையும் காத்திருந்தன. ஆனாலும், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தியாகச் சிந்தையுடன் தங்கள் பத்திரிகைக்காகப் பெரும்பாடுகள்பட்டனர்.இஸ்க்ரா முகவர்களின் வேலைக்கு லெனின் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அவர்களின் பணிகளை அவர் இயக்கி நடத்தினார். துணிவும் தன்னலமின்மையும் அனுபவமும் கொண்ட கட்சி அமைப்பாளர்களாகவும் மக்களின் நலன்களுக்காகப் போராடுகிறவர்களாகவும் அவர்களைப் பயிற்றுவித்தார் லெனின்.விளாதிமிர் இலியிச் என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1901 - ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தமது கட்டுரைகளை ‘லெனின்’ எனும் புனைபெயருடன் வெளியிட ஆரம்பித்தார். இந்தப் புனைபெயரை அவர் தெரிவுசெய்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்றார் அவரின் சக தோழரும் வாழ்க்கைத் துணைவியுமான க்ரூப்ஸ்கயா. இஸ்க்ரா பத்திரிகையில் லெனினும் பிளகானோவும் சேர்ந்து பணியாற்றினார்கள். ரஷ்யாவின் வால்கா எனும் நதியின் பெயரைக் குறிக்கும் விதமாக வால்கின் எனும் புனைபெயரில் இஸ்க்ராவுக்கு பிளகானோவ் கட்டுரைகள் எழுதிவந்தார். அவரைப் போல, ரஷ்யாவின் சைபீரியாவில் ஓடும் ‘லேனா’ என்ற மாபெரும் நதியைக் குறிக்கும் விதமாக தமக்கு லெனின் என்று பெயர் வைத்துக்கொண்டார் விளாதிமிர் இலியிச்! 1902-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இஸ்க்ரா அச்சிட்டு வெளியிடப்படும் இடத்தைப் போலீஸ் உளவாளிகள் அறிந்துகொண்டு படையெடுத்தனர். ஜெர்மனியில் ம்யூனிச் நகரில் தங்கிச் செயல்படுவது இனி ஆபத்து என்பதைப் புரிந்துகொண்ட ஆசிரியர்குழு இஸ்க்ராவை லண்டனுக்கு மாற்றினர். 1902-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் போய்ச் சேர்ந்தார் லெனின். லண்டனிலும் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை. அதனால், இஸ்க்ராவை வெளியிடுவது ஜெனீவாவுக்கு மாற்றப்பட்டது. கூடவே லெனினும் லண்டனிலிருந்து ஜெனீவா சென்றார்.லெனின் லண்டனில் வசித்த காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அறிந்துகொண்டார்; அவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றார். மார்க்ஸ் லண்டனில் வசித்த காலத்தில் அவர் தினமும் பயன்படுத்திய பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தை லெனினும் பயன்படுத்தினார்.பிராவ்தாஇஸ்க்ராவுக்கு அடுத்து போல்ஷ்விக் கட்சியின் மற்றொரு பத்திரிகை ‘பிராவ்தா’. பிராவ்தா என்றால் ‘உண்மை’ என்று அர்த்தம். இது, 1912 - மே 5 அன்று துவக்கப்பட்டது.பிராவ்தாவின் முதலாவது இதழின் தலையங்கம் இவ்வாறு பிரகடனம் செய்தது: ‘தொழிலாளி வர்க்கம் எல்லா செல்வங்களையும் படைக்கிறது. நாளை தனது உழைப்பின் எல்லா பலன்களையும் அது அனுபவிக்கப்போகிறது. தொழிலாளி வர்க்கம் சுரண்டலை ஒழிப்பதற்காகப் போராடுகிறது. எல்லாவிதமான சுரண்டலையும் எல்லா விதமான ஒடுக்குமுறைகளையும் பலப்பிரயோகத்தையும் ஒழிப்பதற்காகப் போராடுகிறது. அனைத்து மக்களின் விடுதலைக்காகவும் மனிதகுலம் முழுவதின் சகோதரத்துவத்துக்காகவும் போராடுகிறது. தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொண்டபின் அது யாரையும் சுரண்ட விரும்பவில்லை. அதேசமயம், யாரும் தன்னைச் சுரண்டுவதையும் அது விரும்பவில்லை.’இஸ்க்ரா போலவே பிராவ்தாவும் ரஷ்யத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஓர் ஆதர்ஷமாக எழுச்சியூட்டியது. தொழிலாளர்களிடம் திரட்டிய நிதியைக் கொண்டு பிராவ்தா துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் 40 ஆயிரம் பிரதிகள் வெளிவந்தன. சில சிறப்பு இதழ்கள் 60 ஆயிரம் பிரதிகள்வரை வெளிவந்தன.பிராவ்தா பெருந்திரளான மக்களோடு கட்சியை இணைத்தது. லெனின் அதில் தினமும் கட்டுரைகள் எழுதுவார். இரண்டு ஆண்டுகளில் 17 ஆயிரத்திற்கு மேலான தொழிலாளர்கள் எழுதிய கடிதங்கள் பிராவ்தாவில் பிரசுரிக்கப்பட்டன. ‘நமது கட்சியின் வேலை இப்போது நூறுமடங்கு அதிகக் கடினமாகிவிட்டது. இருந்தபோதிலும் தொடர்ந்து அதை நாம் நடத்துவோம். பிராவ்தா அரசியல் உணர்வுபெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பயிற்றுவித்தது. எல்லாவிதக் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் அவர்களிடையேயிருந்து தலைவர்கள் குழுவும், கட்சியின் ரஷ்ய மத்தியக் குழுவும் மீண்டும் உருவாகியே தீரும்’ என்று எழுதினார் லெனின்.கொடுங்கோலன் ஜாரின் அரசாங்கம் போல்ஷ்விக்குகள் மீது கொடூரமான அடக்குமுறையை ஏவியது. கட்சியின் மத்தியக் குழு அலுவலகமும் கட்சியின் மற்ற பல அலுவலகங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின. புரட்சிகரத் தொழிலாளர்கள் சைபீரிய சிறைக்கொட்டடிக்கும் போர்முனைக்கும் அனுப்பப்பட்டார்கள். இந்தச் சமயத்தில்தான், தடைகளைத் தகர்த்து முன்னேறும் ஆற்றல்கொண்ட தொழிலாளி வர்க்கத்தின், கட்சியின் திறமைகளில் நம்பிக்கை கொண்ட லெனின் மேற்கண்டவாறு எழுதினார்.ஒருசமயம், இராணுவக் கல்லூரியின் பயிற்சி மாணவர்களான ஜங்கர் எனப்படும் குண்டர்கள் பிராவ்தா அலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தினர். தாக்குதல் நடந்த அரைமணி நேரத்திற்கு முன்னர்தான் லெனின் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியே சென்றிருந்தார். இல்லையெனில் அந்தக் குண்டர்கள் அவரையும் தாக்கியிருப்பார்கள். நல்லவேளையாக லெனின் உயிர்தப்பினார்.ஸ்டாலின் முதலான பல தலைவர்களும் மற்றவர்களும் சிறைகளிலிருந்தும் சைபீரிய சிறைக் கொட்டடிகளிலிருந்தும் விடுதலையானவுடன் பிராவ்தா பத்திரிகை மீண்டும் வெளிவரத் தொடங்கியது. எனினும், ஜார் போலீஸின் வேட்டைக்கு பிராவ்தா தொடர்ந்து இலக்காகியது. இதனால் பிராவ்தாவை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ‘இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்’ என்றபடி செம்மையெல்லாம் பாழாக்கிய ஜார் மன்னன் ஆட்சி 1917 பிப்ரவரியில் நடந்த புரட்சியினால் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து பிராவ்தா மீண்டும் வீறுடன் மறுபிறவியெடுத்தது. அன்று அடிமைத்தனத்தில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த ரஷ்யாவை அதிலிருந்து மீட்டெடுக்க உழைக்கும் வர்க்கத்திற்குப் புரட்சிகரப் பார்வையைத் தந்த இரு கண்களாக விளங்கின இஸ்க்ராவும் பிராவ்தாவும். http://epaper.theekkathir.org/