This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, March 1, 2017
லெனினின் செல்லக் குழந்தை... - தி.வரதராசன் ****************************** சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒளிமயமான ஒரு புதிய வாழ்க்கையை வழங்கும் மார்க்சியத் தத்துவத்தை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்கான சோஷலிஸப் புரட்சியை முதன்முதலில் உலகம் வியந்து போற்றும் விதமாக மிகவும் பின்தங்கிய ரஷ்ய நாட்டில் நிகழ்த்திக் காட்டி மகத்தான வெற்றிபெற்ற மாமேதை லெனினும் அவரது தோழர்களும் ரஷ்யாவில் கட்சியை முதன்முறையாகக் கட்டமைப்பதற்காகவும், அதன் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்திய ஆயுதம் பத்திரிகை! இத்தகைய பத்திரிகையைப் பற்றி ஒருசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இவ்விதம் சிறப்பித்துக் கூறினார்:‘மாமேதை லெனின் கூறியதைப் போல, கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை என்பது கூட்டுப் பிரச்சாரகனாக மட்டுமன்றி கூட்டுக் கிளர்ச்சியாளனாகவும் அனைத்து நேரங்களிலும் - அனைத்துச் சூழ்நிலைகளிலும் செயல்படுகிறது.’ அரசின் அடக்குமுறையினாலும் ஜாரின் உளவாளிகளாலும் குண்டர்களாலும் லெனின் துவக்கிய ஏட்டிற்கு பல இடர்கள் நேரிட்டன. எனினும், அவற்றையெல்லாம் தமது அறிவு நுட்பத்தாலும், மனத்திட்பத்தாலும் வென்றுகாட்டினார் லெனின். ஜனநாயக வாழ்வே இருள் மண்டிக்கிடந்தது. எழுத்துரிமை, பேச்சுரிமை, பத்திரிகைச் சுதந்திரம் எல்லாமே பறிக்கப்பட்டிருந்தன. அதனால், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் குரலாக ஒரு பத்திரிகையைத் துவக்குவதென்பது அன்று ரஷ்யாவில் இயலாத காரியமாக இருந்தது.ஜார் ரஷ்யாவில் நாஷா ஸார்யா, ரூஸ்கயா, ஸ்லோவோ, சேவெர்னயா, ரபோச்சயா எனப் பல பத்திரிகைகள் சுதந்திரமாக வெளிவந்து கொண்டிருந்தன. இவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஒரு போல்ஷ்விக் (கம்யூனிஸ்ட் ) பத்திரிகையை மட்டும் அங்கே வெளியிட முடியவில்லை.இந்நிலையில், ரஷ்யாவில் லெனின் இருப்பது அவரது உயிருக்கே ஆபத்து என்ற நிலைமை. அதனால் லெனின் ரஷ்யாவைவிட்டு வெளியேறி 1890 ஜூலை 16-ஆம் தேதி ஜெர்மன் போய்ச் சேர்ந்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு அயல்நாட்டு வாழ்க்கை. லெனினது எண்ணமெல்லாம் ரஷ்யாவில் கட்சிக்கென்று ஒரு பத்திரிகையைத் துவக்குவதிலேயே சுழன்று கொண்டிருந்தது. ‘நமது வாழ்க்கைச் சத்து முழுவதையும் பிறக்கவிருக்கும் சிசுவை (பத்திரிகையை) ஊட்டி வளப்பதற்கே செலவிடவேண்டும்’ என்று லெனின் நியூரம்பர்க் நகரத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்தார். துவக்கவிருக்கும் அந்தப் பத்திரிகை அவருக்கு ஒரு செல்லக் குழந்தையாகவே தோன்றியது.பத்திரிகையைத் துவக்குவதில் லெனினுக்குப் பல சிரமங்கள் எதிர் நின்றன. அச்சகத்திற்கு இடம்பிடிக்க வேண்டும். அச்சு இயந்திரம் வாங்க வேண்டும்; அச்சு எழுத்துக்கள் வாங்கவேண்டும்; இவற்றுக்கெல்லாம் முதலில் பணம் வேண்டும். ஜெர்மனியில் இருந்த சமூக-ஜனநாயகக் (சோஷல் டெமாக்ரடிக்) கட்சித் தோழர்கள் இதற்குத் தேவையான நிதிஉதவிகள் செய்தனர். இவ்வாறு 1900-ஆவது ஆண்டு செப்டம்பர் 24 அன்று லெனினது செல்லக் குழந்தை இஸ்கரா (தீப்பொறி) தோன்றியது!.‘இஸ்க்ராவிலிருந்து பெருந்தழல் மூண்டெழும்’ என்ற வாசகத்துடன் ஒவ்வோர் இதழும் வெளிவந்தது. இஸ்கராவின் முதல் இதழில் லெனின் எழுதிய கட்டுரையின் தலைப்பு: ‘நமது இயக்கத்தின் அவசரப் பணிகள்’.1977-ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ‘சோவியத் நாட்டின் சுருக்கமான வரலாறு’ எனும் நூல் லெனின் துவக்கிய இஸ்கரா பற்றி கூறுவதாவது:‘இஸ்க்ராவை அச்சிட்ட ரகசிய அச்சகத்தை அமைப்பதற்கு முன்னணி ஜெர்மானியத் தோழர்கள் லெனினுக்கு உதவினார்கள். லெனின் மனைவியும் போராட்டத் துணையுமாகிய குரூப்ஸ்கயாவும் ஜாரின் சிறைகளிலிருந்தும் சைபீரிய குடியிருப்புச் சிறைகளிலிருந்தும் தப்பிவந்த மற்ற புரட்சியாளர்களும் இஸ்கராவை வெளியிடுவதில் லெனினோடு சேர்ந்து உழைத்தார்கள். இஸ்கரா ஏடு ‘ரஷ்யத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என அறைகூவி அழைத்தது. ரஷ்யாவில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் நடந்த வர்க்கப் போராட்டங்களைப் பற்றி விவரித்தது. ஆட்சியைப் போராடிப் பெறும் பணியிலிருந்து தொழிலாளர்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றவர்களை அது கடுமையாக விளாசியது. லெனின் எழுதிய ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளிலும், அவரது போராட்டத் தோழர்கள் எழுதிய கட்டுரைகளிலும், முன்னணிச் சித்தாந்தத்தைக் கருவியாகக் கொண்டதும், ஒடுக்குவோருக்கு எதிரான போராட்டத்திற்கு உழைப்பாளர்களை இட்டுச்செல்ல வல்லதுமான புரட்சிக் கட்சியொன்றை அமைப்பதன் இன்றியமையாத் தேவையைக் குறித்து விளக்கப்பட்டது. ‘லெனினின் போராட்டத் தோழர்களான பாபுஷ்கின், பௌமன், ஜெம்ளியாச்கா, கலீனின், ஸ்வெர்திலோவ் ஆகியோரும் பிறரும் இஸ்கரா பத்திரிகைப் பிரதிகளை ரஷ்யாவுக்கு ரகசியமாகக் கொண்டுவந்தார்கள். இவ்வாறு செய்வது மிகக் கடினமாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது. பத்திரிகை குறைந்த இடத்திற்குள் அடங்கவேண்டும் என்பதற்காக அது மிக மெல்லிய காகிதத்தில் அச்சிடப்பட்டது. இரட்டை அடுக்கு கொண்ட பெட்டிகளில் வைத்தும், ஆடைகளின் உள்ளே வைத்துத் தைத்தும் வேறு முறைகளிலும் இஸ்கரா ரஷ்யாவின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது. ரஷ்யாவில் இஸ்கராவை விநியோகித்த புரட்சியாளர்கள் மெய்யான வீரர்களாக இருந்தனர். அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்தார்கள். தனித்தனித் தொழிலாளர் வட்டங்களுக்கிடையே தொடர்புகளை அமைத்துக் கொண்டனர். நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பிரதேசங்களிலும் முதலாளிகளை எதிர்த்து தங்கள் தோழர்கள் நடத்திய போராட்டங்களின் வடிவங்களையும் முறைகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்வதற்கு இஸ்கரா உதவியது. இவ்வாறு லெனினது இஸ்கரா ரஷ்யாவின் முன்னணித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தது; புரட்சிகரக் கட்சியைக் கட்டமைக்கும் பெரும் பணியாற்றியது.இஸ்க்ரா வெளிவர ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யாவில் புரட்சிகர இயக்கம் வளர்ந்துவிட்டது. அதைத் தொழிலாளி வர்க்கம் தலைமைதாங்கி நடத்தியது. தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தங்கள் அதிகரித்தன. விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். மாணவர்கள், இளைஞர்கள் கொந்தளித்தார்கள். இந்தப் போராட்டத்தைத் தலைமைதாங்கி சரியான திசையில் இயக்குவதற்கு சக்தி வாய்ந்த, ஸ்தாபன அமைப்புக்கொண்ட மார்க்சியக் கட்சி தேவைப்பட்டது. இஸ்கரா ஏடு இத்தகைய கட்சிக்காகவே போராடியது. கட்சிப் பத்திரிகை ஒரு ஆர்கனைசர் - கட்டமைப்பாளர் என்று லெனின் வர்ணித்தாரே அந்தப் பணியை இஸ்கரா செய்தது. கட்சியை நிறுவுவதில் திட்டவட்டமான பங்காற்றிய இஸ்கராவின் ஆன்மாவாகத் திகழ்ந்தார் லெனின். தொடரும் http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR