This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, March 1, 2017
பொல்லாத சொப்பனமல்ல... கலங்க வைக்கும் நிஜங்கள் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், எங்கள் உரிமை என்று சங்கே முழங்கு! ***********************வறட்சியில் வாழ்வு தொலைந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குறுவை கனவாக, பின்னர் சம்பாவும் சாம்பலாகும் நிலையை எந்த விவசாயியால் ஜீரணிக்க முடியும்? 150 ஆண்டுகளில், 1876க்குப் பிறகு இது தமிழகம் சந்திக்கும் இரண்டாவது பெரு வறட்சி. வடகிழக்கு பருவ மழை 62ரூ குறைவு, தென் மேற்கு பருவ மழை 19ரூ குறைவு. உச்சநீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்குப் பிறகும் கர்நாடக அரசு, காவிரி நீர் விட மறுத்ததன் விளைவு, மேட்டூர் அணையிலிருந்தும் நீர் வரத்து போதவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மறுக்கும் மத்திய அரசுக்கு இதில் பெரும் பொறுப்பு உண்டு. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. உள்ளூர் நீர் நிலைகளைப் பராமரிக்கத் தேவையான முயற்சிகளை உரிய காலத்தில் மாநில அரசு மேற்கொள்ளவில்லை.ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் அணையிலிருந்து 110 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததை நம்பி, மஞ்சள் பயிரிட்டார்கள் விவசாயிகள். போதிய நீர்மட்டம் இருந்தும் 28 நாட்களில் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்ட உடன், சில விவசாயிகளின் மூச்சும் நின்று போனது.கால்நடைகளைப் பராமரிக்க இயலாமல் வந்த விலைக்கு விற்கும் நிலை. வாய் உள்ள மனிதர்களே தத்தளிக்கும் போது, வாயற்ற ஜீவன்களின் நிலை குறித்து யார் கவலைப்படுவது? சோற்றில் மறைக்கப்பட்ட இமயமலை மறுபுறம் பண மதிப்பு நீக்கம் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. விதைகளும், உரமும் வாங்க, விவசாயத் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போனது. கை மாற்று, சிறு கடன்களுக்குக் கூட வழி கிடைக்கவில்லை. கிள்ளி எறியப் பட்ட புற்களைப் போல விவசாயிகள் கொத்துக் கொத்தாக அதிர்ச்சியால் மாரடைத்து மரணித்தனர். தற்கொலைகளும் நடந்தன. நுண்நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்களால் தவணை கட்ட முடியவில்லை. நிறுவனம் அனுப்பிய குண்டர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப் பட்டவர்களும் உண்டு. ஜனவரி 5ம் தேதியே தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இப்பிரச்சனையில் தலையிட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் 144 விவசாயிகள் மரணம் அடைந்த பிறகே, விவசாய அமைப்புகளின் வலுவான இயக்கங்களுக்குப் பிறகே ஜனவரி 10 அன்று தமிழக அரசு, வறட்சி மாநிலம் என்று, அதாவது சென்னை தவிர இதர மாவட்டங்கள் அனைத்தும் வறட்சியால் பாதித்ததாக அறிவித்தது. இந்த அநியாய கால தாமதத்தால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் நாசமாயின. குடும்பச் சூழல் நரகமானது. கடனை வைத்து விட்டுக் கணவன் போய்ச் சேர்ந்தது பொல்லாத சொப்பனமல்ல, நிஜத்தில் தான். கடன் ஒரு புறம், பிள்ளைகளைக் கரை சேர்க்கும் பொறுப்பு மறுபுறம், கலங்கிப் போனார்கள் உயிரோடு இருந்த குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாகப் பெண்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் துவங்கிய அரசியல் சதுரங்க வேட்டையில் அவரவர் காய் நகர்த்திக் கொண்டிருக்க, வறட்சி பெரிதாக ஆள்வோரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும், பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் மனுப் போடப் போன அன்றைய முதல்வர் பன்னீர் செல்வம், விவசாயிகளின் அதிர்ச்சி மரணங்கள் குறித்து பிரதமரிடம் வாய் திறக்கவில்லை. டிசம்பர் இறுதியில் அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா இந்தப் பிரச்சனை நடந்ததைக் கணக்கில் எடுத்ததாகக் கூடத் தெரியவில்லை. அமைச்சர் சம்பத், வயது முதிர்வு காரணமாக, நோய் நொடி காரணமாகவே விவசாயிகள் இறந்தார்கள் என, இமயமலையையே சோற்றில் மறைத்தார். கழக ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் செய்யும் பொய்யான பரப்புரை தான் இது என்றார். திருச்சிக்குப் போன அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்டத்தில் ஒரு விவசாயி கூட சாகவில்லை என்று ஒரே போடாகப் போட்டார். கடைசியில் 17 மரணங்களுக்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் கொடுத்துக் கடமையை முடித்துக் கொண்டனர். வறட்சி காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்ட விவசாயத் தொழிலாளிகளுக்கு எவ்வித இழப்பீடும் கிடைக்கவில்லை. பயிர் கருகியவர்களுக்குக் கிடைத்த இழப்பீட்டுக்கும் முன்வைத்த கோரிக்கைக்கும் இடையே கணிசமான இடைவெளி. அறிவித்ததும் கூட வங்கிக் கணக்கில் இன்னும் ஏறவில்லை. பயிர்க் காப்பீடும் கிடைக்கவில்லை. வர்தா புயலுக்கும் சரி, வறட்சிக்கும் சரி, நிவாரணம் ஒரு தம்பிடி கூட மத்திய அரசிடமிருந்து வரவில்லை. பேரூராட்சிக்கும் வேண்டும் 100 நாள் வேலை ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை, ரூ.400 சம்பளம் என்ற முழக்கம் முன்னுக்கு வரும் சூழலில், செய்த வேலைக்கு 3-5 மாத பாக்கி வேறு. அரசு வெட்கப்பட வேண்டாமா?விருதுநகரின் ஒன்றியப் பகுதியில் சில வேலை தலங்களுக்கு சென்று, விவசாய தொழிலாளிகளுடன் உரையாடிய போது, சம்பள நிலுவை பற்றி வருத்தத்துடன் சொன்னார்கள். 2016 தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்ட போது, இரட்டை இலைக்குத் தான் என்றார்கள். சரி, எம்.எல்.ஏ. வந்து இது பற்றி விசாரித்தாரா என்று நாம் கேட்ட போது, க்கும்… இரட்டை இலை பஞ்சாயத்து தலைவரே வரவில்லை, எம்.எல்.ஏ. எங்கிருந்து வருவார் என்று அங்கலாய்த்தார்கள். நடப்பு பிரச்சனைக்கும் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதற்கும் தொடர்பு உண்டு என்று விளக்கிச் சொல்லி விட்டு வந்தோம். மத்திய அரசு, தற்போது உள்ள தேவைக்கு ஏற்ற விதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது பிரதான காரணம். கடந்த வருடத்தை விட நிதி நிலை அறிக்கையில் ரூ.501 கோடி தான் ஒதுக்கீடு கூடுதல், அதுவும் நிலுவை சம்பளத்தைக் கழித்து விட்டால், ஒதுக்கியது குறைவு என்று ஆகி விடும். இதுவரையிலான ஒதுக்கீட்டிலேயே இது தான் அதிகம் என்று தன் முதுகை, நிதியமைச்சர் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாலும், உண்மை என்னவோ வேறு மாதிரி தான் இருக்கிறது.ஊரகப் பகுதிக்கு இத்திட்டம் வந்தது சரி, ஆனால் தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் என்ன, நகர்ப் பகுதியா? பெருவாரியான பேரூராட்சிகள் ஊரகப் பகுதி தான். டவுன் பஞ்சாயத்து என்று பெயர் மாற்றம் செய்தால், நிலைமை மாறி விடுமா? ஊரக வேலை உறுதிச் சட்டம் பேரூராட்சிக்குப் பொருந்தும் என்று மாற்றினால் யார் குடி கெட்டு விடும்? பல குடிகளைக் காக்கும் வேலை தானே இது? கூவத்தூரில் அதிமுகவும், 18.02.17 அன்று சட்டமன்றத்தில் திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றியது’ இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. வறட்சி நிவாரணப் பிரச்சனையில், பலரது வாழ்க்கையைக் காப்பாற்ற இந்த சண்டையைப் போடக்கூடாதா? குடிநீர் தேடி குடங்களின் ஊர்வலம் கடும் குடிநீர் பஞ்சம் தலை தூக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தண்ணீர் லாரி நின்றால், குடங்களின் ஊர்வலம் பல கி.மீ. நீள்கிறது. ஒரு குடம் தண்ணீர் ரூ.10-15 வரை போகிறது. குளிர்பான பன்னாட்டு நிறுவனங்கள், நமது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவது போலவே நிலத்தடி நீரையும் உறிஞ்சி கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கின்றன. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இருக்கும் பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு லிட்டர் நீர் வெறும் 4 காசுகள் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் அரசால் விற்கப்படுகிறது. நிலமோ, ஏக்கருக்கு ரூ.1 என்ற ரீதியில் 98 ஆண்டுகளுக்கு 72 ஏக்கர் குத்தகை விடப்பட்டிருக்கிறது. விலைவாசி ஏறுகிறது, பார்த்து போட்டுக் கொடுங்கள் என்று அரசு கேட்க, நிறுவனங்கள் பெரிய மனது பண்ணி, 99, 100வது வருட குத்தகை தொகையை ஏக்கருக்கு ரூ.2 ஆக உயர்த்தி ஒப்பந்தம் நடந்திருக்கிறது. இது தான் வளர்ச்சியின் லட்சணம். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இச்சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கோப வரிகளில் தண்ணீரும் இணைந்திருக்கிறது. பல லட்சம் தனி ஒருவர்களை தாகத்தில் தவிக்கவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் அரசு தான் மக்களின் அரசா? மக்களுக்கான அரசு என்று யார் பேசினாலும், எந்த மக்களுக்கு என்று கேட்க வேண்டும். வார்த்தைகளில் வர்க்கம் ஒளிந்திருக்கிறது. தோழர் இ.எம்.எஸ்., நாட்டின் 4வது ஐந்தாண்டு திட்டம் குறித்த திட்ட கமிஷனின் அணுகுமுறை பற்றிய விமர்சனத்தை உருவாக்கி முன்வைத்தார். உற்பத்தியாளர்களுக்கு (ஞசடினரஉநசள) ஊக்கத் தொகை என்ற அதன் ஆலோசனையை மேற்கோள் காட்டி, உற்பத்தியாளர்கள் என்றால் எங்களைப் பொறுத்த வரை தொழிலாளிகள் தான், எனவே அவர்களுக்கு ஊக்கத் தொகை என்றால் எங்களுக்கு சரி தான் என்று எழுதினார். தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்ட பிரசண்டன் என்பதைப் போல, கேள்வி கேட்கிற எந்த இடத்துக்கும் வராமல், மோடி வானொலியிலும் கூட்டங்களிலும் பேசுகிற விஷயங்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் வர்க்க நலனை அடையாளம் காண வேண்டும். சோறு போட கணக்கு பார்ப்பதா? பொது விநியோக முறை படிப்படியாக பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் மட்டுமே, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, துவக்கத்திலிருந்தே அனைவருக்குமான ரேசன் முறையை வலியுறுத்தி வருகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் கீழ் என்றவர்கள், தற்போது உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முன்னுரிமைப் பகுதி பொதுப் பகுதி என்ற வரையறைகளைப் பயன்படுத்துகிறார்கள். கிரித் பாரிக் கமிட்டியின் பரிந்துரைகளின்படியே மானிய வெட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விலையில்லா அரிசி 20 கிலோ என்பது முழுமையாக ஒரு கார்டுக்குக் கிடைத்து சில வருடங்கள் ஆகின்றன. அம்மா உணவகத்துக்கு ஒரு பகுதி ரேசன் அரிசி போய்க் கொண்டிருப்பது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. பருப்பு, சர்க்கரையும் தற்போது தட்டுப்பாடு தான். மண்ணெண்ணெய்க்கும் அதே கதியே. அரசு ஆணையில் ஒன்றும், நிஜத்தில் வேறுமாய் தான் நிலைமை போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, வறுமைக் கோட்டுக்கு மேல் என்ற வகையினருக்கான மத்திய அரசு வழங்கும் அரிசியின் விலையை மோடி அரசு 3 மடங்கு உயர்த்தி விட்டது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்த பின், மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் மானிய விலை அரிசியின் அளவும் வெகுவாகக் குறைக்கப்படும். இது மேலும் சிக்கல்களை உருவாக்கும். மத்திய அரசு, மக்களுக்கு சோறு போடுவதற்கு கணக்குப் பார்ப்பது சரியல்ல. முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகை அளிப்பதற்கு என்றைக்காவது கணக்கு பார்த்திருப்பார்களா? உருப்படியான வேலையும், விலைவாசிக்குத் தகுந்த கூலியும் இல்லை. வறட்சி கொல்லுகிறது. தண்ணீர் பஞ்சம் வந்து கொண்டிருக்கிறது. ரேசன் முறையும் சீர்குலைந்தால் எப்படித் தான் வாழ முடியும்? மோடி அரசு அணிந்திருக்கும் கண்ணாடியில் அதானி, அம்பானி, மல்லையா முகங்கள் மட்டுமே மக்கள் முகங்களாகத் தெரிகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? எழுவோம் தமிழகமே! எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது எழுவோம் தமிழகமே என்று. இந்தக் கட்சிக்கு எதிராக அல்லது அந்தக் கட்சிக்கு எதிராக என்பதல்ல. வாழப் பிறந்த மக்களிடமிருந்து வாழ்வைப் பறிக்கும் கொள்கைகளுக்கு எதிராக, நவீன தாராளமய பாதைக்கு எதிராக அழைக்கிறது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் எங்கள் உரிமை என்று சங்காய் முழங்கிட மார்ச் 2-6 இயக்கத்தில் இணைவோம். உ.வாசுகி http://epaper.theekkathir.org/
Labels:
U. Vasuki