அதியோகி அழைக்கிறார்
அதியோகி அழைக்கிறார்
மனையாளைப் புதைத்த
நிலத்தருகே
உமையாளின் கணவருக்கு
சிலை எழுப்பி
அதியோகி அழைக்கிறார்
மலை குடைந்த
குகை மாளிகையில்
களி நடம் புரியும் கவியோகி
வெட்ட வெளியில்
மலை அளவு சிலை வைத்து
அதியோகி அழைக்கிறார்
சுற்றி இருக்கும்
வனம் நிலம்
அத்தனைக்கும் ஆசைப்பட்ட
அற்புத
அதியோகி அழைக்கிறார்
திருநீற்றுப்பட்டை அடித்து
தயாராவதற்கு முன்பே
திருட்டுப்பட்டா தயாரித்த
அதியோகி அழைக்கிறார்
கடும் கருங்கல்லில்
பெரும் சுவர் எழுப்பி
கஜ முகங்களின் வழித்தடுத்து
மீறி நீளும் துதிக்கைகளுக்கு
மின்சார வேலி போட்டு
சிவமோட்சம் கொடுத்த
சித்தர்
அதியோகி அழைக்கிறார்
தன்மகளுக்கு
தாம்பத்யம் தந்தருளி
பிறர் மகளுக்கு பிரம்மச்சரியம்
பூனும் போது சிரைத்த ரோமங்களை
தன் தாடியில் சூடிய தவ
அதியோகி அழைக்கிறார்
நிலம் பிரித்து வனம் அழித்து
செதுக்கி வைத்த சிலை
தென்னாடு உடைத்து
என் நாட்டவர்க்கும் இறைவனாய்
இருப்பவனுக்கு
ஐகோர்ட்டில் ஆர்டர் வாங்கி
பிரதிஷ்டை செய்ய
அதியோகி அழைக்கிறார்
122 அடியைத் திறக்க
56 அங்குலம் வருகிறார்
கோடி கோடியாய் கொட்டி
சுத்தம் செய்வேன் கங்கையை என்றவர்
திறக்கும் சிவனின்
தலையில் கங்கை
இல்லை இல்லவே இல்லை
- ந.முத்து