SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Sunday, February 26, 2017

சிக்கலுக்குத் தீர்வு இன்னொரு சிக்கலா? ***********பேரா. நா. மணி பத்தாம் வகுப்பில் தினேஷ்குமார் 467 மதிப்பெண்கள். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள உள்ளான். கணிதம், அறிவியல் குரூப்தான். இன்று வரை தினமும் நாலரை மணிக்கு எழுந்து ஏழரை மணி வரை வீடுவிடாகச் சென்று பேப்பர் போட்டுவிட்டுத்தான் பள்ளி செல்கிறான். மாலையும் கூட வீட்டு வேலை இருக்கிறது. இவன் ஒருநகர்ப்புற சிறுவன். கிராமப்புறங்களில் வீட்டு வேலைக்கும் விவசாய வேலைக்கும் உதவி புரிந்து கொண்டேதான் +2 படித்து வருகிறார்கள். எல்லா விடுமுறை நாட்களிலும் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு உதவி செய்துகொண்டே படித்து வரும் சிறுவர்களும் ஏராளம்.இந்தச் சிறுவர்களுக்கு ரெக்கை முதிர்ந்த பிறகுதான் இப்படிக் கஷ்டப்பட்டு படிக்கிறார்கள் என்று இல்லை. இத்தகைய மாணவர்கள் பலர் பள்ளிக்கூட்டம் செல்வதை பார்த்திராத தாய்மார்கள் பலர். அந்தக் குழந்தைகள் யார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அக்குழந்தைகளின் தாய் தந்தையரை நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அதிகாலையில் நமக்கு கீரையைக் கொணர்ந்தளிக்கும் தாய்மார்கள். விடிகாலையில் வீதிகளைச் சுத்தம் செய்து தரும் ஆண்கள், பெண்கள். இவர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை எத்தனை நாள் பார்த்திருப்பார்கள்? பிறந்த குழந்தைக்கு மருத்துவர் கனவை விதைத்து, தான் வாழும் பகுதியிலேயே உயர்ந்த பள்ளிகளில் படிப்புப் படிக்கத் தனி அறை. கொஞ்சம் கணக்கும் அறிவியலும் குழந்தைக்கு நன்கு வருகிறது எனில், அதற்குத் தக்க சகல ஏற்பாடுகளும் செய்துதரும் பெற்றோர்.பாடப்புத்தகம், பயிற்சி தவிர வேறொன்றும் அறியாக் குழந்தை. ஆறாம் வகுப்பிலிருந்து நீட்டுக்கு தனிப்பயிற்சி. அதுவும் முடியவில்லை யென்றால், இராஜஸ்தான் மாநில கோட்டாவிற்கு அனுப்பி உயர்தனிப்பயிற்சி பெற்று, நீட் வழிமருத்துவப் படிப்பினை உத்தரவாதப்படுத்தும் பெற்றோர்கள். இந்த பிரிவினரையும் சமம் என்கிறது நீட். இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.உலகப் பிரசித்தி பெற்ற குத்துச் சண்டை வீரனுக்கும் நம் உள்ளூர் வீரனுக்கும் போட்டி வைத்தால் வெற்றி யார் பக்கம் என்பதில் அய்யத்திற்கு இடமிருக்குமோ?சமமான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள சமச்சீர் பாடத்திட்டம், சமச்சீரான பள்ளி, உள்கட்டமைப்பு வசதி, சமச்சீரான ஆசிரியர் மாணவர் விகிதம், சமச்சீரான கல்வியியல் தகுதி, கற்றல் கற்பித்தல் முறைகள், சமச்சீரான பொருளாதார சமூக நிலை வேண்டுமல்லவா? இதனை உத்தரவாதப்படுத்தாமல் சமமான தேர்வுகள் நடத்தினால் என்ன நடக்கும்? சமூக, பொருளாதார நிலைமைகளில் பின் தங்கிய மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் ‘நாங்கள் மருத்துவம் படிக்க லாயக்கற்றவர்கள்’ – என உலகுக்கு அறிவித்துவிட்டு வேறு படிப்புகளுக்கோ, வேறு வேலைகளுக்கோ சென்றுவிடுவார்கள். நீட் நோக்கம் அதுவா? இல்லையென நாம் கூறலாம். ஆனால் தேர்வு கூறும் செய்தி அதுதான். அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார வல்லுநர்கள், வரலாற்றாளர்கள் எனப் பல சமூக விஞ்ஞானிகள் கணிதம், அறிவியல் சரிவர கைவரப் பெறாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டு, கலைப்பாடப் பிரிவுகளை நோக்கித் துரத்தப்பட்டவர்கள் அல்லவா?தற்போதைய தமிழக மருத்துவக் கல்வி தேர்வு முறையிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. நீட் தேர்வு முறையிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. எனவே சமூக நீதி காப்பாற்றப்படுகிறது எனப் பேசுகிறார்கள். சமூக நீதி காப்பதில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்கிய தமிழகத்தில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்களே இப்படிப் பேசுவது வருத்தம் அளிக்கிறது. சமூகத்திலும், பொருளாதாரத்திலும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் குழந்தைகளிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை அடையாளம் காணுதல், வளர்த்தெடுக்க வாய்ப்புக் கொடுத்தலே சமூக நீதி அல்லவா? நீட் தேர்வு முறையில் இதற்கு ஒரு விழுக்காடு கூட உத்தரவாதமில்லையென அடித்துக் கூறலாம்.தற்போதைய தமிழக மருத்துவக் கல்வி தேர்வு முறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் வெகு சிலரே தேர்வாகியுள்ளனர் என்ற வாதத்தில் உண்மை இருப்பது போல் தோன்றலாம். பத்தாம் வகுப்பு வரை, தமிழ் வழியில், அரசுப் பள்ளியில் படித்து பலர் இன்று மருத்துவம் பயின்று வருகின்றனர். பல்வேறு உத்திகளால் தனியார் பள்ளி களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு, தனியார் பள்ளி முத்திரையோடு அவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.‘தமிழ்நாடு முழுவதும் பெரும் சிரத்தையுடன் ஒரே மாதிரி நடத்தப்படும் +2 தேர்வே ஒரு நுழைவுத்தேர்வுதான். உயர்கல்வி சேர்க்கைக்கு அதுவே போதுமானது, வேறு வகை நுழைவுத் தேர்வுகள் தேவையில்லை’ என்ற தமிழக அரசின் நிலை இந்தியாவிற்கே முன்மாதிரியானது. தமிழ்நாட்டின் மாநில உரிமையைக் காக்கும் முடிவு. ஒரு மாநிலம் தனக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், உயர்கல்வி சேர்க்கை உள்ளிட்ட தனக்கான சுய திட்டமிடலுக்குமான சிறந்த முயற்சி. இந்த முடிவுக்கு இடதுசாரிகள் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ் நாட்டின் நீண்ட நெடிய சமூக நீதி போராட்ட அடையாளம் இது.‘தமிழக அரசின் நீட் விலக்கு சட்டம் நீதிமன்றம் சென்றால் நிற்காது’ என்றொரு அபிலாசையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது சிலரின் ஆவல். சிலரின் அச்சம். சிலரின் அறியாமை. நீதிமன்றங்களின் பல தீர்ப்புகள் பெரும்பகுதி மக்க ளின் நன்மை சார்ந்தே அமைந்திருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் காக்கத் தவறியதை நீதி மன்றங்கள் காத்து நின்றிருக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பும் பின்பும் நீதிமன்றங்களின் நிலை வேறு, வேறு.தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவன ங்களுக்காக நடத்தப்படும் பிளஸ் டூ தேர்வு முறை களில் சில சிக்கல்கள் இருக்கலாம். அதனைக் களைய வேண்டியது நம் கடமை. அந்த சிக்கலுக்கு மாற்றாக மேலும் ஒரு மிகப் பெரும் சிக்கலைத் தீர்வாக முன்மொழிதல் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. தினேஷ்குமாரும், தன் குழந்தை பள்ளி செல்வதை பார்த்திராத; பள்ளி செல்லும் பிள்ளை முகமறியாத தாயின் பிள்ளையும் உயர்கல்வி பயிலவேண்டுமானால் தமிழக அரசின் இச்சட்டம் அவசியத் தேவை. தினமும் பேப்பர் போட்டுக் கொண்டே தனது கனவுகளை ஈடேற்ற போராடும் தினேஷ் குமார்களும், தங்கள் பிள்ளைகள் பள்ளி செல்வதை என்றோ ஒரு சில நாட்கள் பார்த்து மகிழும் தாய்களின் கனவும் ஈடேற வேண்டுமெனில் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விதிவிலக்கு தேவை. கட்டுரையாளர்: மாநிலஒருங்கிணைப்பாளர்கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பொருளியல் துறை தலைவர், ஈரோடு கலைக்கல்லூரி/ http://epaper.theekkathir.org/