SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

தலித்-பழங்குடி குழந்தைகள் கல்வி நிதி வழங்காதது ஏன்? சமூகக் கட்டமைப்பில் மிக மிகப் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களான தலித், பழங்குடி மக்கள் முன்னேற்றம் காண்பதற்கான முக்கியமான பாதை கல்வி. குறிப்பாக, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் தலித் மற்றும் பழங்குடியினப் பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்த கல்வி ஊக்கத்தொகை கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டம் மாநில அரசுமூலமாக செயல்படுத்தப்படுகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான அத்திட்டம் தமிழகத்தில் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிற உண்மை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு எந்திரங்கள் எந்தளவுக்கு மெத்தனமாக இருக்கின்றன என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 2008-09ம் ஆண்டு வழங்கவேண்டிய கல்விஉதவித்தொகையை மாநில அரசு இப்போதுதான் பயனாளிகளுக்கு வழங்கப்போகிறதாம்! அப்போது பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பலமாணவிகள் தற்போது திருமணமாகி குழந்தைகளும் பெற்றுவிட்டனர்! காலத்தே அந்த நிதியுதவி அவர்களுக்கு கிடைத்திருந்தால் பலர்மேற்கல்வியைத் தொடர்ந்திருக்க முடியும். வறுமையாலும், அரசின் உதவிக்கரம் நீளாததாலும் இச்சமூகங்களின் எத்தனை பெண்குழந்தைகள் உயர்கல்வி மறுக்கப்பட்டவர்களாக, எதிர்காலத்தை இருட்டாக்கிக் கொண்டார்களோ? பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களின் பெண் குழந்தைகள் கல்வி பயிலுவதை ஊக்கப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தை அடையவிடாமல் மாநில அரசே பொறுப்பின்றிச் செயல்படுவது வேதனையளிக்கிறது. ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகமான ‘தாட்கோ’ மூலமாக தலித் மக்களுக்குபல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக அரசு தாட்கோவுக்கான மொத்தநிதியில் 20 விழுக்காட்டை மட்டும்தான் விடுவித்துள்ளதாம். இதனால் 2015-2016, 2016-2017 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன. படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள் வாகனம் வாங்க 50 விழுக்காடு மானியத்துடன் கடனுதவி, கால்நடைகளை வளர்க்க 100 விழுக்காடு மானியத்துடன் கூடிய திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். என்னென்னவோ இலவசத் திட்டங்களை அறிவித்த அதிமுக அரசு இக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. பல மாணவர்கள் வட்டிக்குக் கடன் வாங்கி கட்டணத்தை செலுத்துகிற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். ஏற்கனவே அதிமுக அரசுக்கு முன்பு, 2006முதல் 2011 வரை அதிகாரத்தில் இருந்த திமுகஅரசு மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. முறைகேடுகளில் ஈடுபடுவதிலும் அரசு நலத்திட்டங்களை மடைமாற்றம் செய்வதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இதனால் மேலும் மேலும் கைவிடப்படுகிற அடித்தட்டு மக்கள் வெகுகாலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். http://epaper.theekkathir.org/