This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 9, 2017
‘சர்வதேச பெண்கள் இயக்கத்தை எப்பாடுபட்டாயினும் துவக்கியாக வேண்டும்’ பெண்களுடைய உரிமைகள் பற்றிய பிரச்சனை குறித்து தோழர் லெனின் என்னுடன் பன்முறை விவாதித்தார். மாதர் இயக்கத்துக்கு அவர் மிகுந்த முக்கியத்தும் அளித்தார் என்பதைக் கூறத் தேவையில்லை. அதற்கு ஏன் முக்கியத்துவம் அளித்தாரெனில், பொதுவான வெகுஜன இயக்கத்தின் அத்தியாவசியப் பகுதியாக அதை அவர் கருத்தினார்; சில நிலைமைகளில் அது பொது வெகுஜன இயக்கத்தின் தீர்மானகரமான ஓர் அரங்காகிவிடக்கூடும் என்னும் அளவுக்கு அதனை ஓர் அத்தியாவசியப் பகுதியாகக் கருதினார். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை பெண்கள் முழுநிறை சமுதாயச் சமத்துவம் அடைவதானது அடிப்படையானதும், சிறிதும் சர்ச்சைக்கு இடமில்லாததுமாகும் என்பதைச் சொல்லாமலே விளங்கும் ஒன்றாகக் கொண்டார்.இப்பொருள் குறித்த எங்களுடைய முதலாவது நீண்ட உரையாடலை 1920ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கிரெம்ளினில் லெனினுடைய பெரிய வேலையறையில் நடத்தினோம். அவருடைய மேஜையின் பின்னால் லெனின் அமர்ந்திருந்தார். அதன் மீது புத்தகங்களும் ஏடுகளும் நிறைய இருந்தன. படிப்பதிலும் வேலைகளிலும் அவருக்கிருந்த அடங்காத ஆர்வத்துக்கும் ஆவலுக்கும் இவை சான்று பகன்றன. அதேபோதில் மேதை ஒருவரிடம் சாதாரணமாய் எதிர்பார்க்கப்படும் ஒழுங்கின்மை சிறிதும் காணப்படவில்லை.‘‘தெளிவான திட்டவட்டமான தத்துவார்த்த அடிப்படையில் நாம் சக்திமிக்கதோர் சர்வதேச மாதர் இயக்கத்தை நிறுவ வேண்டும் என்பதில் ஐயமில்லை’’ எனக்கு அவர் முகமன் கூறியதும், இவ்வாறு சொல்லி எங்களுடைய உரையாடலைத் தொடங்கினார். ‘‘மார்க்சியத் தத்துவம் இல்லாமல் நல்ல நடைமுறைச் செயல்கள் இருக்க முடியாது: இது தெட்டத் தெளிவு. கம்யூனிஸ்டுகளாகிய நமக்கு இந்தப் பிரச்சனையிலும் கோட்பாட்டில் தேர்ந்த தெளிவு அவசியமாகும். ஏனைய எல்லாக் கட்சிகளுக்கும் நமக்குமிடையே தெட்டத் தெளிவான கோடு வரைந்து கொண்டாக வேண்டும். நமது இரண்டாவது சர்வதேசக் காங்கிரஸ் 34 துரதிர்ஷ்டவசமாய் மாதர் பிரச்சனையை விவாதித்து முடிவெடுக்கவில்லை என்பது மெய்தான். அது இப்பிரச்சனையைக் கிளப்பிற்று. ஆனால் திட்டவட்டமான ஒரு நிலையை ஏற்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது, கமிஷன் கட்டத்திலே தேங்கி நின்றுவிட்டது. இந்தக் கமிஷன் ஒரு தீர்மானத்தையும் விரிவுரைகளையும் ஸ்தூலமான கொள்கை வழியையும் வகுத்தாக வேண்டும். ஆனால் இதுகாறும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டாகவில்லை. நீங்கள்இதற்கு உதவி செய்ய வேண்டும்’’.இப்பொழுது லெனின் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது பற்றி ஏற்கனவே மற்றவர்களிடமிருந்து கேட்டிருந்த நான், எனது ஆச்சரியத்தை வெளியிட்டேன். புரட்சியின்போது ருஷ்யப் பெண்கள் செய்தவை யாவும் குறித்தும், புரட்சியைப் பாதுகாப்பதற்காகவும் மேற்கொண்டு வளர்த்துச் செல்வதற்காகவும் இப்பொழுது அவர்கள் செய்து வந்தவை யாவும் குறித்தும் நான் நிரம்ப உற்சாகம் கொண்டிருந்தேன். போல்ஷிவிக் கட்சியில் பெண்கள் வகித்த அந்தஸ்தையும் அவர்களது செயற்பாட்டையும் பொறுத்தமட்டில், அது இத்துறையில் உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என்பதாகக் கருதினேன். அது ஒன்றுதான் சர்வதேசக் கம்யூனிஸ்டு மாதர் இயக்கத்துக்குப் பயிற்சி பெற்ற புடமிடப்பட்ட மதிப்பிடற்கரிய சக்திகளைத் தந்துதவுகிறது; அதேபோதில் அது மகத்தான வரலாற்று முன்னுதாரணமாகவும் பணிபுரிகிறது.‘‘அது உண்மைதான் முற்றிலும் உண்மைதான்’’ என்று இலேசாகச் சிரித்தபடி லெனின் கூறினார். ‘‘பெத்ரோகிராடிலும் இங்கே மாஸ்கோவிலும் இவற்றிலிருந்து நெடுந்தொலைவுகளிலுள்ள நகர்களிலும் தொழிற்கேந்திரங்களிலும் பாட்டாளிவர்க்கப் பெண் குலத்தோர் புரட்சியின் போது உன்னத முறையில் பணியாற்றியாற்றினர். அவர்களின்றி நாங்கள் வெற்றிபெற்றிருக்க முடியாது. அல்லது வெற்றி பெறுவது துர்லபமாயிருந்திருக்கும். இது என்னுடைய கருத்து. அவர்கள் காட்டிய வீரதீரத்தை, இன்றும் அவர்கள் காட்டிவரும் வீரதீரத்தை என்னென்பது! அவர்கள் ஏற்றுச் சகித்துவரும் இன்னல்களையும் இழப்புகளையும் நினைத்துப் பாருங்களேன். ஆனால் சிறிதும் தளராது உறுதியுடன் நிற்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சோவியத்துகளை எப்படியும் காத்திட வேண்டுமென விரும்புகிறார்கள், சுதந்திரத்தையும் கம்யூனிசத்தையும் நாடுகிறார்கள். ஆம், நம்முடைய தொழிலாளிப் பெண்கள் அதியற்புதமானவர்கள், வர்க்க உணர்வு கொண்ட போராட்ட வீரர்கள், அவர்கள் நமது பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவர்கள். பொதுவில் அரசியல் சட்ட ஜனநாயகவாதிகளை சேர்ந்த சீமாட்டிகள் கூட பெத்ரோகிராடில் எங்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் சட்ட ஜனநாயகவாத இராணுவ மாணவர்களை 35க் காட்டிலும் அதிக நெஞ்சுறுதியை வெளிப்படுத்தினர் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.‘‘எங்கள் கட்சியில் நம்பகமான, கூரறிவு படைத்த சலியாதுழைக்கும் பெண்களை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பது உண்மையே. அவர்களால் சோவியத்துகளிலும் நிர்வாகக் கமிட்டிகளிலும் மக்கள் கமிசாரகங்களிலும் பொறுப்புமிக்க பதவிகளும் மற்றும் பல பொதுப் பதவிகளும் வகித்துப் பணியாற்ற முடிகிறது. அவர்களில் பலரும் கட்சியிலோ, தொழிலாளி, விவசாயி வெகுஜனங்களிடையிலோ செஞ்சேனையிலோ இராப்பகலாய் பணிபுரிகிறார்கள். அவர்களுடைய பணி எங்களுக்கு மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். பெண்களின் ஆற்றலுக்கும் சமுதாயத்துக்காக அவர்கள் புரியும் சேவையின் உயர் மதிப்புக்கும் சான்றாய் அமைவதால், உலகெங்குமுள்ள எல்லாப் பெண்களுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதலாவது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமானது மெய்யாகவே பெண்களின் முழுநிறை சமுதாயச் சமத்துவத்துக்குப் பாதையைச் செப்பனிட்டு வருகிறது. மலையாகக் குவிந்த பெண்ணுரிமை வெளியீடுகள் செய்யக்கூடியதைக் காட்டிலும் அதிகமாய் அது தப்பெண்ணங்களை வேரறுத்து வருகிறது. இவ்வளவும் இருந்தும் கூட, இன்னமும் கம்யூனிஸ்டு சர்வதேச மாதர் இயக்கம் உருவாகவில்லை. எப்பாடுபட்டாயினும் நாம் ஒன்றை உருவாக்கியாகவேண்டும். உடனே இத்தகைய இயக்கம் ஒன்றைத் துவக்கியாக வேண்டும். இதுபோன்ற ஓர் இயக்கம் இல்லாதவரை நமது அகிலமும் அதன் கட்சிகளும் ஆற்றும்பணி முழுமையானதாகாது, என்றும் முழுமையானதாக முடியாது. நமது புரட்சிகரப் பணி அதன் முழு அளவிலும் நிறைவேற்றப்பட்டாக வேண்டும் வெளிநாடுகளில் கம்யூனிஸ்டுப் பணி எந்நிலையில் இருந்து வருகிறது?’’கம்யூனிஸ்டு அகிலத்தைச் சேர்ந்த கட்சிகளிடையிலே அக்காலத்தில் மோசமாயிருந்த ஒழுங்கற்றத் தொடர்புகளை கொண்டு நான் சேகரிக்க முடிந்த எல்லாத் தகவல்களையும் அவருக்குத் தெரிவித்தேன். சற்று முன்புறம் சாய்ந்தபடி, சலிப்பு, பொறுமையின்மை அல்லது களைப்புக்கான அறிகுறி சிறிதுமின்றி, லெனின் நான் கூறியதைக் கவனமாய்க் கேட்டார். இரண்டாந்தர முக்கியத்துவமுடைய சிறு விவரங்களையும் கருத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரைக் காட்டிலும் கவனமாய்க் கேட்கக் கூடியவரை யாவற்றையும் ஒழுங்குபடுத்தி அவரைக் காட்டிலும் பொதுத் தொடர்பை ஏற்படுத்தக் கூடியவரை நான் அறியேன். நான் அவரிடம் சொன்னது குறித்து அவ்வப்பொழுது அவர் கேட்ட சுருக்கமான, எப்பொழுதுமே கறாரான கேள்விகளிலிருந்தும், நான் கூறிய விவரங்களுக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வந்து ஆராய்ந்த அவரது பரிசீலனை முறையிலிருந்தும் இது நன்கு புலனாயிற்று. லெனின் சுருக்கமான சில குறிப்புகள் எழுதிக் கொண்டார்.‘எனது நினைவுகளில் லெனின்’ எனும் நூலிலிருந்து http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
