SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

வெறியூட்டலால் கிடைத்த வெற்றி இது சீத்தாராம் யெச்சூரி அண்மையில் நடந்த சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் பாஜக அதிர்ச்சியூட்டும் வகையில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் 2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.2014 தேர்தலில் பதிவான வாக்குகளில் உ.பி.யில்42.3 சதவீதத்தையும், உத்தரகண்டில் 55.3 சதவீதத்தையும் பாஜக பெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்றத்தேர்தலில் உ.பி.யில் 39.7 சதவீத வாக்குகளையும், உத்தரகண்டில் 45.6 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜக - அகாலிதள கூட்டணி படுதோல்வி அடைந்து, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தபோதும், பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக, பாஜக பெருமளவில் பணத்தை வாரிஇறைப்பது, கேபினட்அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டுவது உள்ளிட்ட உருட்டல், மிரட்டல் என கீழ்த்தரமான வேலைகள் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தீர்ப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த ஒப்புதல் எனக் கூறுவது பொருத்தமல்ல என்பதைத்தான் பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உ.பி. மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மதவாத மற்றும் சாதி ரீதியான சமூக அணிதிரட்டல் மிக முக்கியக் காரணமாகும். மக்களவையில் தற்போது பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி.க்கூட இல்லை. உ.பி. மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரு முஸ்லிமைக் கூட பாஜக வேட்பாளராக நிறுத்தவும் இல்லை. இது வெளிப்படுத்தும் செய்தி தெளிவானது. 2014 தேர்தலின் போது, பாஜகமுன்வைத்த ‘குஜராத் மாடல்’ நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதுதான் அது. குஜராத் மாடல் வளர்ச்சி என்று பரப்பப்பட்ட பல்வேறுபரப்புரைகள் முற்றிலும் புனைந்துரைக்கப்பட்ட பொய் என்பது அம்பலமாகிவிட்டது. அதே நேரத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்து மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஆபத்தானமுறையில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது மட்டும்தான் குஜராத் மாடலாக உள்ளது. இடுகாடு மற்றும் சுடுகாடு குறித்தும் பக்ரீத் மற்றும் தீபாவளி பண்டிகைகள் குறித்தும் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதன் மூலம் வெளிப்படையாக மதவெறி பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பாஜக தலைவர் மேலும் ஒரு படி மேலே சென்று காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முஸ்லிம்களை தாஜா செய்கிறது என்று குறிப்பிட்டதோடு, ‘காசப்’ என்ற புதிய வார்த்தையையும் உருவாக்கினார். பாகிஸ்தானிலிருந்து உதவி பெறும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தோடு, எதிர்க்கட்சிகளுக்கு உறுதியான தொடர்பு இருப்பதாகவும், இவர்களை எதிர்ப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றும் கூறப்பட்டது. இதையொட்டி, பாஜக பாகிஸ்தானுக்கும் அதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், வெளிப்படையாகவே பாஜகவினர் கூறினர். இதனால்தான் , தங்களால், ‘துல்லியத் தாக்குதலில்’ வெற்றி பெற முடிந்தது என்றும் கூறினர். ‘ஆனால், இதுஉண்மையல்ல. துல்லியத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னும் பின்னும்நம்முடைய வீரம் மிக்க படை வீரர்கள் பலர்பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.’முஸ்லிம் மக்கள் கணிசமாக இருந்த மாநிலங்களில் மட்டும் தான் இத்தகைய மதவெறிப் பிரச்சாரம் வேலை செய்துள்ளது. மற்ற 3 மாநிலங்களில் இவர்களின் ‘மேஜிக்’ வேலை செய்யவில்லை. ‘முஸ்லிம் அரசு வரப்போகிறது’ என்ற ஆர்எஸ்எஸ் வகையறாவின் வதந்திப் பிரச்சாரம் உ.பி.யில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு எதிராக மக்களை அணி திரட்ட பயன்படுத்தப்பட்டது. சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியோ, பகுஜன் சமாஜ்கட்சியோ இந்தப் பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு பதிலாக, அவர்கள் விரித்த வலையில் விழுந்தனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தமது பிரச்சாரத்தில், தமது கட்சி 100முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும் எனவே சிறுபான்மை மக்கள் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் திரும்பத் திரும்ப பேசியதன் மூலம் தம்மை முஸ்லிம்களின் ரட்சகராக காட்டிக் கொள்ளவே முயன்றார். மறுபுறத்தில், சாதி ரீதியான அணி திரட்டலை பாஜக செய்தது. யாதவர்கள் அதிகம் உள்ள சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக யாதவர் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்டவர்களையும், பட்டியலின மக்களில் ஒரு பிரிவினரான ஜாத்வா பிரிவினரிடையே செல்வாக்கு மிக்க பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக ஜாத்வா அல்லாத பட்டியலின மக்களையும் பாஜக அணி திரட்டியது. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளிடையே வலிமையான மாற்று இல்லாததும் பாஜகவின் வெற்றிக்கு உதவியுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, அமைக்கப்பட்டது போல‘மகா கூட்டணி’யை உ.பியிலும் உருவாக்கியிருந்தால், பாஜகவை பின்னுக்குத் தள்ளியிருக்க முடியும் என்ற வாதம் தற்போது பலராலும் முன்வைக்கப்படுகிறது. சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக கிடைத்த வாக்குகளை கூட்டினால், இந்த ‘மகா கூட்டணிக்கு’ 313இடங்கள் கிடைத்திருக்கும் என்றும் பாஜகவுக்கு 90 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.துரதிர்ஷ்டவசமாக அரசியல் என்பது எண்களின் கூட்டல், கழித்தல் அல்ல. பாஜகமற்றும் மோடி முன்வைக்கும் மதவெறி கருத்துகளுக்கு எதிராக வலுவான போராட்டத்தின் மூலமே வலிமையான மாற்று உருவாக முடியும்.பணமதிப்பு நீக்கம், மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்துவதன் மூலமே பாஜகவை வலிமையாக எதிர்கொண்டிருக்க முடியும். நம்முடைய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 40 சதவீதம் அளவிற்கு பங்களிப்பு செய்யக் கூடிய, 80 சதவீதம் அளவிற்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய முறைசாரா தொழில்துறை பணமதிப்பு நீக்கத்தால், முற்றாக நொறுங்கியுள்ளது. உ.பி.யில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை கடுமையாக சீர்குலைந்துள்ளது. பணத்தாள் தட்டுப்பாடு காரணமாக தங்களது விளைபொருட்களை அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விடபாதி அளவு விலைக்கே விவசாயிகள் விற்றுள்ளனர். பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றிற்கு எதிராக மக்களிடம் வலிமையான பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்கு பதிலாக சமாஜ்வாதி-காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பாஜக விரித்தகுறுகிய பிரச்சார வலைக்குள் விழுந்துவிட்டன.பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது பணக்காரர்களுக்கு எதிரானது, ஏழைகளுக்கு ஆதரவானது என்று பாஜக தம்பட்டம் அடித்தது. ஆனால், உண்மை இதற்கு நேர்எதிரானது. சமாஜ்வாதி-காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் போக்கு, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரிலேயே வெளிப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் உள்ள 16எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இந்தப் பின்னணியில் 2016 நவம்பர் 28 ஆம் தேதி இடதுசாரிக்கட்சிகள் இணைந்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன.பெரும்பாலான மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் வெறும் வாய் வார்த்தையோடு நின்றனவே தவிர, மக்களின் அதிருப்தியை பயன்படுத்தி அவர்களை அணிதிரட்ட முன்வரவில்லை. அப்போது இதில் ஏற்பட்ட தடுமாற்றம் தற்போது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் பாஜக வெட்டிய குழியில் விழுந்ததோடு, மக்களை தங்களது தேர்தல் ஆதாயத்திற்காக அடையாள அரசியல் அடிப்படையில் திரட்டுவதில்தான் மும்முரமாக இருந்தன.முதலாளித்துவ ஊடகங்களில் பாஜக ஆதரவாளர்கள் அடித்த கொட்டும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புகுந்து விளையாடிய பண பலமும் பாஜக மட்டுமே களத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்கின. மாறாக, இடதுசாரிக் கட்சிகள் மாற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. ஆனால், கேரளாவைப் போன்றோ அல்லது இடதுசாரிக்கட்சிகள் பலமாக உள்ள மற்ற மாநிலங்களைப் போன்றோ உ.பி. மற்றும் உத்தரகண்டில் இடதுசாரி சக்திகள் வலுவாக இல்லை. வலுவான மாற்று இல்லாததன் பலனை பாஜக பெற்றுள்ளது. தேர்தலின் போது, ஊழல் செய்து சேர்த்த பணம் பயன்படுத்தப்படுவதாக பாஜக பசப்பிவந்ததும் அம்பலப்பட்டுவிட்டது. பாஜகவினால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பாஜகவினால் பண விநியோகம் செய்யப்பட்டது. மேலும்கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியை பின்னுக்குத் தள்ளி, பெரும்பான்மையை பெற்றதிலும் பாஜகவின் இந்தபண விளையாட்டு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க ஆழமான தேர்தல் சீர்திருத்தம்செய்யப்பட வேண்டும் என்பது அவசர , அவசியமான ஒன்றாகும். மோடி மற்றும் பாஜக முன்வைக்கும் பொய்யான சித்திரங்களுக்கு மாற்றாக, நம்பகமான இடதுசாரி ஜனநாயக மாற்று உருவாக்கப்பட வேண்டும். வகுப்புவாத பிரிவினையை தூண்டி மக்களிடையே பகைமையை ஏற்படுத்தும் பாஜக பரிவாரத்தின் பிரச்சாரத்தை முறியடித்து நமது இந்தியக் குடியரசின் மதச்சார்ப்பற்ற, ஜனநாயக அடித்தளம் பாதுகாக்கப்பட வேண்டும். பரவலான, வலுவான மக்கள் போராட்டங்களின் மூலமாகவே வகுப்பு வாதத்தின் ஆபத்தான சித்து வேலைகளை முறியடிக்க முடியும். தமிழில் - மதுக்கூர் இராமலிங்கம் http://epaper.theekkathir.org/